Saturday, October 14, 2006

ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்

நான் ஒரு கிளர்ச்சிக்காக என்னுடைய முன்னைய பதிவில் இவண் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான் என்று சொல்லிப் போனேன்.

சொன்னபின்னர் விடுமுறையின் மயக்கத்தில் அதுபற்றிய நினைவெதுவும் இல்லை.மீண்டு வந்து பதிவுகளை மீள வாசிக்கும்போது 'ஆள வந்தான்' என்ற வார்த்தை உறுத்துகிறது.

எனது பொதுவுடமை இசத்தை மீறி 'குட்டிபூர்ஷ்வா' இச்சை தலை காட்டிவிட்டதோ என்றதொரு கலக்கம்.

என்னதான் தத்துவங்களைப் படித்து முட்டிக்கொண்டாலும் எனக்குள்ளேயும் ஒரு பூர்ஷ்வா சிந்தனையாளன் உறங்கிக்கொண்டிருப்பதை அறிந்த மயக்கம்.

தமிழகத் திரைப்படல்கள் அவ்வப்போது ஆளுமைகளில் செலுத்தும் செல்வாக்கு பற்றி அறிதல் ஆர்வம்.

என்னதான் சிந்தித்தாலும் எல்லாவற்றையும் மீறி அந்தப் பாடல் எனக்குப் பிடித்துத் தான் உள்ளது.

ஆளவந்தான் படம் ஓரளவு பிடித்திருந்தது.அதைவிட ஆளவந்தானின் பாத்திரப் படைப்பு பிடித்திருந்தது.அதை விட முந்தி வந்தானா பிந்தி வந்தானா ஆளவந்தான் என்ற அரசியல் பிடித்திருந்தது.

அண்ணன் ஆளவந்தான்
தம்பி அதைப் பறிக்க வந்தான்.

முந்தி வந்த தமிழனை பிந்தி வந்த சிங்களம் ஆளுகின்றது.

முந்தி வந்த திராவிடனை பிந்தி வந்த ஆரியன் ஆளுகின்றான்.

முந்தி இருந்த செவ்விந்தியனை பிந்தி வந்த ஐரோப்பியன் இல்லாமலே செய்தான்.

முந்தி வந்த பாலஸ்தீனத்தை பிந்தி வந்த இஸ்ரேல் விழுங்கியது.

எங்கெங்கு நோக்கினும் ஆளவந்தானுக்கும் தம்பிக்கும் இடையிலான அதிகாரப் போட்டி கூர்மைப் பட்டுக்கொண்டே செல்கிறது.இன்னோரன்ன காரணங்களைச் சொல்லி ஆளவந்தவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.

இது ஆளவந்தானின் அழிவுடன் நின்றுவிடுமா.இல்லை இல்லவே இல்லை.அவனை அழித்த உரிமை பறிப்பாளனின் உரிமைகளைப் பறிக்க இன்னொரு ஆளவந்தான் வருவான்.

குட்டி பூர்ஷ்வா என்னும் மார்க்சியம் கற்றுத்தந்த சொல்லாடலை விட்டுப் பார்த்தால் உலகில் உள்ள அத்தனை மனிதனும் ஆளவந்தான் தான்.

காணி நிலம் வேண்டுமெனக் கேட்ட பாரதி.
இந்தியாவைக் கனவிலேயே கட்டி வளர்த்த அப்துல் கலாம்.
பாட்டாளி நாட்டை கட்டியமைத்த லெனின்.
தூய ஆரியர் குலத்தைக் கனவு கண்ட அடொல்ப் ஹிற்லர்.
உலக நாடுகளை ஒரு குடைக்கீழ் ஆள விரும்பும் புஷ்

அத்தனை பேரும் ஆளவந்தான் தான்.ஒவ்வொருவர் கனவிலும் இருக்கும் வித்தியாசம்.சிலர் தமக்குச் சொந்தமானதை ஆளவந்தார்கள்,சிலர் தமக்குச் சொந்தமானதோடு பிறருக்குச் சொந்தமானது எல்லாமே எல்லோருக்கும் சொந்தமானது என்றார்கள்.சிலர் மற்றவர்களுக்குச் சொந்தமனாதெல்லாவற்றையும் தனது என்றார்கள்.

இரண்டாமவன் பொதுவுடமைவாதி,மூன்றாமவன் சர்வாதிகார வாதி.

ஒவ்வொரு வாதிக்கும் பின்னால் ஒவ்வொரு ஆளவ்ந்தான் இருக்கிறான்.உலகில் நடக்கும் அத்தனை போர்களுக்கும் காரணம் இந்த ஆளவந்தான்கள் தான்.

அதற்காக ஆளவந்தான் கொள்கையே தவறு என்றில்லை.

மண்ணாள வந்த கௌதம சித்தார்த்தன் தன்னையே தான் ஆண்டு புத்தனானான்.

அவன் வழியில் பலர் தன்னைத்தானே ஆண்டார்கள்.அதாவது பௌத்தம் என்னும் இசத்துக்குள் இச்சைகளை கட்டுப்படுத்தி வாழ்ந்தார்கள்.அவர்களால் தங்களைத் தாங்களே ஆள முடிந்தது.

இன்னும் சிலர் அதே புத்தனை முன்வைத்து தரணியாள விரும்புகிறார்கள்.அவர்கள் ஆசைகளை ஆளவந்தார்கள்.

இதில் எனக்குள்ளிருக்கும் ஆளவந்தான் யாரென்று வினவுகிறேன்.

அவனுக்குள்ளும் சில குட்டிக் குட்டி ஆளவந்தான்கள் இருக்கிறார்கள்.ஒருத்தனுக்கு பெண்களை சைற் அடிக்கப் பிடிக்கும்,ஒருத்தனுக்கு வாசிக்கப் பிடிக்கும்,ஒருத்தனுக்கு இயற்கை பிடிக்கும்

ஒட்டுமொத்தமாக ஒரு பொடியன் என்னையே நான் ஆளவந்தான்.குட்டிக் குட்டி ஆளவந்தான்களின் இச்சைகளுக்கு அவ்வப்போது தீனி போடுவதன் மூலம் அவர்களை ஒரு பொடியன் என்ற பெரிய ஆளவந்தான்.அதாவது எனது ஆளுமைக்குள் கொண்டு வருகிறேன்.

ஆசைகளைத் துறப்பதென்பது புத்தனால்தான் முடியும்.அவற்றைக் கட்டுப்படுத்துவதென்பது ஒரு பொடியனாலும் முடியும்.

ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான் என்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு.உண்மையில் கண்டங்கள் ஐந்தல்ல ஏழு.
இதில் வட அமெரிக்கா,தென்னமெரிக்காவை அமெரிக்கா என்னும் கண்டமாக்கி ஆளற்ற அந்தாண்டிக்காவை விட்டு ஐம்பெருங் கண்டமென்று சொல்வார்கள்.

அந்த ஐம்பெருங் கண்டங்களும் எனது பார்வை எல்லைக்குள் இருக்கின்றன.நான் அந்தாட்டிக்காவில் இருக்கிறேன்.நான் கால்நீட்டி உட்கார்ந்தால் ஐம்பெருங் கண்டங்களும் எனது காலடியில் இருக்கும்.

உங்களது ஒவ்வொரு அசைவையும் அந்தாட்டிக்கா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டே இருக்கிறது.

0 Comments:

Post a Comment

<< Home