Saturday, October 14, 2006

மீண்டும்

மீண்டும் ஒரு நீண்ட விடுமுறை.அந்தா இந்தா என்று இழுத்தடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது நான் இந்தப்பக்கம் தலை,கை,கால்,முகம் காட்டி

இடையில் அவ்வப்போது தமிழ் வலைப்பதிவுகளின் பக்கம் மேற்குறிப்பிட்ட உறுப்புகளைக் காட்டினாலும் வேலை வாவா என்றது வலைப்பூ போ போவென்றது எழுதத் தூண்டும் சுவாரசியம் இல்லாமற்போனதும் பிறவிக்குணம் சோம்பல் இன்னமும் இறவாமை வேண்டுமென்று அடம்பிடிப்பதுமாய் இந்த வலைப்பதிவின் பக்கம் வரமுடியாமற் செய்துவிட்டன.

அன்பிற்குரிய அறிஞர் ஏ.ஜே இறந்துவிட்டார்.அவரை எழுத்தாளர் என்று சொல்வதை விட அறிஞர் அல்லது சிந்தனையாளர் என்று சொல்வதைத் தான் நான் விரும்புகிறேன் ஏனென்றால் வாழும் சமூகத்தில் எழுதிக் குவிப்பதே எழுத்தாளன் பணி என்று வாழ்பவர் மத்தியில் சமரசங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து காட்டியவர் ஏ.ஜே.

ஊரில் இருந்த காலத்தில் அவர் தமிழில் எழுதிய கட்டுரைகளை மல்லிகை இதழில் படித்திருக்கிறேன்.கனடாவில் ஒருமுறை சேரனைச் சந்தித்தபோது அதைப் பற்றிக் கேட்டதோடு ஏ.ஜே இப்போது ஏதாவது எழுதுகிறாரா எனக் கேட்டேன் அண்மைக் காலமாக தமிழில் எதுவுமில்லை என்றார் நிறைய எழுதினால் நீர்த்துப் போய்விடும் என்பது ஏ.ஜேயின் கொள்கையோ என்னவோ.நல்லவேளை ஜெயமோகன் போன்றவர்கள் ஏ.ஜேயைச் சுற்றி இருக்கவில்லை.

இடைப்பட்ட காலத்தில் நான் இழந்த இன்னொருவர் பிஸ்மில்லாகான்.அவரது மறைவின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவாவது இந்த வலைப்பதிவை மீண்டும் திறந்திருக்கலாம் ஆனால் அதையும் அவரே தடுத்துவிட்டார் அவரது பைரவி ஆலாபனையும் சிவரஞ்சினி,ஜோன்பூரியும் அதற்கு மேலும் நான் பேசுவது வீணென்று சொல்லிக்கொண்டிருந்தன.தனக்கான சோககீதத்தை தானே பாடி தானே கேட்ட ஒரே ஒருத்தர் பிஸ்மில்லாகானாகத் தான் இருக்க முடியும்

அவர்களது ஆத்மா சாந்தியடையவேண்டும்.

தமிழ்மணம் திரட்டியில் என் பதிவைத் திரட்டுவதற்கு மூன்று பதிவுகள் எழுத வேண்டுமாம்.இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறேன் அதற்குள் மிரட்டினால் எப்படி.பழைய பதிவுகள் இரண்டை மீள்பிரசுரம் பண்ணிவிட்டேன் அறிந்தவர்கள்,தெரிந்தவர்கள் மன்னிக்க.

0 Comments:

Post a Comment

<< Home