Saturday, October 14, 2006

இசங்கள் பாதி இச்சைகள் பாதி கலந்து செய்த மனிதன் நான்

தமிழில் எழுதத் தெரிந்தவர்களெல்லாம் எழுத ஆசைப்படும் பத்தியை நானுமெழுத வந்தேன்.ஏற்கனவே இருக்கும் முகமூடிகளுக்குப் போட்டியுமல்ல இங்கே பத்தியெழுதும் பெட்டைக்குப் போட்டியுமல்ல.

பின்னவீனத்துவம்,முற்போக்கு,மார்க்சியம்.ட்ரொஸ்கீயம்,தமிழ்த்தேசியம்,
பேரினவாதம்,பாசிசம்,இருத்தலியம்,எக்சிடென்சியலிசம்,சேடிசம்,மசாக்கிசம்,மாந்திரீக யதார்த்தவாதம்,பெண்ணியம்,ஆணாதிக்கம்.கற்பு,கறுப்பு,ஆண்மை,பெண்மைகற்பிதங்கள்,
உலோகாயுதம்,ரியலிசம்,நியோ ரியலிசம்,ஸ்டாலினசம்,இந்துத்வா,இஸ்லாமிய அடிப்படைவாதம்,தீவிரவாதம்,பயங்கரவாதம்என்று அரசியல்,சமூக,இலக்கியங்களில் நிலவும் அத்தனை நடப்புக்கும் ஒவ்வொரு பெயர் சொல்லுறாங்களே ஈதெல்லாம் என்னவாக இருக்கும் என்று பூராய ஆரம்பித்த பதிவு.

பூராயப் பூராய இசங்களாகவும் வாதங்களாகவும் விரிந்துகொண்டிருக்கும் உலகில் தனியொருவனாகத் தத்தளித்து பின் அதுவே இன்னொரு வாதமாகவோ இசமாகவோ போய்விடலாமென மனம் தேறி ஆரயப் புறப்பட்டு வாதங்களில் பலனின்றி பக்க வாதத்திலும் பாரிச வாதத்திலும் உழன்று.தக்கதொரு இடமாய் தமிழ்மணத்தைக் கண்டின்புற்றீங்கு வந்தேன்


இந்த உலகம் மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.மனிதர்களோ இசங்களாலும் வாதங்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.இவைகளோ மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.தானே உருவாக்கிய கடவுளை தானே தாள்பணிந்தாற்போல, இவைகளோ மனிதனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டன.

தன்னைத் தானே சுற்றி இசங்களாலான கோடுகளையோ வட்டங்களையோ வரைந்துகொண்டு வழுவாமல் வாழ்வதற்கு முயற்சி செய்கிறான்.அந்த வட்டங்களில் சில சிறுவட்டங்கள் சில பெருவட்டங்கள்,சில நீள்வட்டங்கள் சில வட்டம்போற் தோன்றும் பரவளைவுகள் ஒவ்வொன்றின் இயல்புக்கேற்பவும் தன்னையும் சீரமைத்துக் கொள்வதிலும் இனங்காட்டிக் கொள்வதிலும் இந்த மனிதன் படும் பாடு இருக்கிறதே அம்மம்மா சொல்லி மாளாதது சொல்லில் எழுதாதது.

தனது வட்டத்திற்குள் மற்றவனை இழுத்தல்.மாற்றானின் வட்டம் பக்கம் வரும்போதெல்லாம் தாவி அதனுள் கலத்தல்.தன்னுடைய வட்டத்தை வாதங்களால் நிலைநிறுத்தல்.நிறுத்த முடியாத போதெல்லாம்.இசங்களையும் வாதங்களையும் குறைசொல்லல்.ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்றைப் பிரச்சாரம் செய்தல் என்று காலம் முழுவதும் இசங்களுடனும் வாதங்களுடனும் ஓடுகிறது மனித வாழ்க்கை.இவர்கள் பலவட்டங்களாற் சூழப்பட்ட மையங்கள்

கடவுள் கூட இந்த இசங்களின் முன்னைய வடிவம்தான் என்பது தெளிவு. ஈதெல்லாவற்றினதும் முடிபு ஆன்மீகம் எனச் செப்புவோர் கூட தாமிருப்பது இன்னோர் வட்டமே என்றுணர்வதில்லை.வெற்றானந்தப் பெருவெளியிற் சுற்றித் திளைப்பதாகப் பாவனை பண்ணுதல் மட்டுமே அவர்களால் முடிகிறது.வட்டங்கள் கோடுகளாலானவை

இசங்கள் கொள்கைகள் என்றால் கொள்ளையிலே போன இச்சைகள் மட்டும் மனிதனை விட்டுவிடுகிறதா.இச்சைக்கும் கொள்கைக்கும் இழுபறிப்படுவதே மனித வாழ்வாகிப்போய்விட்டது.
பென்ணியம் பேசும் ஆண்களுக்குள்ளும் பென்ணுடல் மீதான இச்சைகள் ஒளிந்திருக்கின்றன.மார்க்சியவாதிகளுக்குள் குட்டி பூர்ஷ்வா ஒளிந்திருக்கிறான்.தீண்டாமைக்குப் போராடிக்கொண்டே பூணூல் கனவு காண்பவர்களும் உள்ளார்கள்.உலகம் இசங்களால் மட்டுமல்ல இச்சைகளாலும் ஆனது.

தான் இச்சிப்பதை அடைவதற்கு இசங்களையும் வாதங்களையும் முன்வைப்பது பெருகிவிட்டது.இச்சைகளை மற்றவருக்கு மறைப்பதற்காக இசங்களாலான வட்டங்கள் தேவைப்படுகின்றது.கட்புலனாகும் வட்டங்கள் இசங்கள் கொள்கைகள்,கட்புலனாக வட்டங்கள் இச்சைகள்.இவையெல்லாவற்றினதும் மையம் நீங்கள்,நானுமே.

இதையெல்லாம் விமர்சனம் பண்ணி இசங்களிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் விடுபடும் நோக்கமோ அதனை விட்டுவருமாறு உங்களைக் கோரும் நோக்கமோ இந்தப் பொடியனுக்கு இல்லை.எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். இச்சைகள் பூர்த்தி செய்யப்படுவது இயலாத காரியம்.அதே போன்று எத்தனை இச வட்டங்களை வரைந்து கொண்டாலும் இச்சைகள் கட்புலனாகா வட்டமாக ஒளிந்துகொண்டே ஒளிர்கின்றன.அவற்றை மறைக்கலாம் மறக்க முடியாது.இமய மலை போனாலும் எழும்பி நின்று ஆடத்தான் செய்யும்.வேசங்களைக் களைவது இப்பதிவின் நோக்கங்களில் ஒன்று.

அது சமுதாயத்தில் காணும் மனிதர்களின் வேசமாகவும் இருக்கலாம்.எனக்கு நானே போட்டுக்கொண்ட வேசமாகவும் இருக்கலாம்.வேசங்களைக் களைவதென்பது சமூகத்தைச் சீர்திருத்திவிடும் நோக்கமல்ல.அதனைக் களையும் போது தோற்றமளிக்கும் வெற்றுடலைப் பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி.

கொஞ்சம் பொறுங்கோ மைய நீரோட்டத்தில்(தமிழ்மணத்தில்) என் சிறு நீரையும் கலந்துவிட்டு மிச்சத்தைக் கதைக்கிறேன்.

இவண்
தமிழ்மணத்தின் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்

ஏற்கனவே தமிழ் வலைப்பதிவுலகில் இருக்கும் லூசுகள் முகமூடிகள் காணாதென்று இன்னுமொன்றா என நீங்கள் நினைக்கலாம் என்ன செய்வது எல்லாம் என் தலைவிதி(அந்தாட்டிக் கண்டத்து மனிதன் ஆதிமனிதன் அவன் முகத்தையெல்லாம் காட்டமுடியாது)

3 Comments:

Blogger Thekkikattan|தெகா said...

//வேசங்களைக் களைவது இப்பதிவின் நோக்கங்களில் ஒன்று//

அப்படியெனில் தனக்கென்று ஒரு இச வட்டம்கட்டி அதனை தனது வரைவுகோலாக கொண்டு, மற்ற வட்டங்களில் இருப்பவர்களின் வேசம் களைவதுதான் தாங்களின் இச வட்டத்தின் நோக்கமா ;-))??

//எனக்கு நானே போட்டுக்கொண்ட வேசமாகவும் இருக்கலாம்.//

அப்படி போட்டுக் கொண்டதினால் எளிமையாக விசயங்களை அணுகமுடியுமென்றாலும், எது சரி, எது தவறு என்பதனை யார் தீர்மானிப்பது? தாங்களின் வட்டத்திலிருந்து தாங்கள் களையும் வேசம் சரியெனவே நினைத்து, தாங்களின் வேசம் களைதல் நடைபெறுகிறது. ஆனால், அடுத்த வட்டத்தில் இருப்பவரும் அவரின் வட்ட நிலையில் இருந்து தான் சொல்லும் கருத்தும் ஏற்புடையதே என்றுதானே முன்வைக்கிறார்.

அப்படியெனில், ஒரு பிரளயத்திற்கான கலம் ஒன்று அமைந்துவிடுகிறது அல்லாவா? நீங்களும் ஒரு 'இசத்தில்' சிக்குன்றுறீர்கள், அல்லவா?

//அதனைக் களையும் போது தோற்றமளிக்கும் வெற்றுடலைப் பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி.//

அதுதான் எல்லா இசத்திலும் நடைபெறுகிறது. ஒரு வட்டத்தில் இருப்பவர் மற்றவரின் வட்டத்தை சாடி, தான் வெற்றுடலை பார்த்துவிட்டதாக 'குரூர திருப்தி' கொள்கிறார்கள். அதுதான் தாங்களின் நோக்கமோ, சரி எப்படித்தான் அப்படி வட்டங்களில் சிக்காமல் இசங்களைப் பேசுவது :-))

பி.கு: இக் கருத்துக்கள் சிந்தனைக்குகெனவும், நமது duality natureப் பற்றி அலசவுமே வைக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளவும். தனிப்பட்ட முறையில் உராய்ந்து சென்றதாக கருத வேண்டாம்.

8:56 AM  
Blogger வரவனையான் said...

வாம்மா மின்னல் !

இந்த பெடியனுக்கு பட்டதையும் ;) படிக்க ஆயுத்தமாயிருக்கிறோம்

11:51 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

வாருங்கோ தெக்கிட்டான் ஐயா எத்தனை நாளாயிற்று இப்படித் தத்துவத்தில் உராய்ந்து.

வேஷங்களைக் களைவதென்பது எனக்கு நானே போட்டுக்கொண்ட வேஷங்களை என்று தெளிவாகச் சொல்லிவிட்டேனே.என்னையே சமூகத்தின் பிரதிநிதியாய் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள்ளிருக்கும் வேஷங்களை வெளிப்படுத்தும் போது அவற்றுள் உங்கள் வேஷங்களையும் நீங்கள் அடையாளம் காணலாமல்லவா.

தனிமரங்கள் தானே தோப்புகளை உருவாக்குகின்றன.இந்தப் பொடியனும் தோப்பின் தனி மரமே.இச்சைகளும் இசங்களும் வட்டங்களும் கோடுகளும் எங்களுக்கு நாங்கள் உருவாக்கியவைதானே அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று மாறுவதோ பல்வேறு வட்டங்களுக்குள் தலையைக் கொடுப்பதோ அல்லது வட்டமே வேண்டாமென்று பரவளைவாக எங்களுக்கென்று கோடு வரைவதோ எங்கள் கையில் தானே இருக்கு

6:13 PM  

Post a Comment

<< Home