Tuesday, October 31, 2006

பறை

நகரத்தின் மத்தியிலிருக்கும் அந்தப் பெருங்கோவிலிருந்து துந்துபி முழங்குகிறது கூடவே சங்கு சேகண்டியின் ஓசையும்.பக்தர் கூட்டம் இறை பூசை காணும் பெருவிருப்பில் சாரை சாரையாகக் கோவிலுள் நுழைகிறது.நுழைந்தவர்களை கோபுர வாசலில் கையில் பறை வாத்தியத்துடன் நந்தியின் உருவச்சிலை எதிர்கொள்கிறது நந்தியை வணங்கி நாதன் இருக்குமிடம் போகிறார்கள்.

யாகசாலையின் ஓரத்தில் பெரியதொரு பறையை தலையில் உருமாவும் உடம்பெங்கும் நீறும் அணிந்த ஒருவர் முழக்கிக் கொண்டிருக்கிறார்.சிவனுக்கு மிகவும் பிடித்த டமருகம் என்னும் பறையை சிலர் முழக்குகிறார்கள்.யாகசாலையைச் சுற்றி பல்வேறு வகையான பறைகளின் முழக்கம் கேட்டவண்ணம் உள்ளது கூடவே யாழ்,சங்கு,குழல் போன்றவையும் அணிசேர்க்கின்றன.யாகத்தின் முடிவில் தத்தமக்கு அளிக்கப்பட்ட மரியாதைப் பொருட்களுடன் வீடு போகிறார்கள் பறை வாசித்த இசைக்கலைஞர்கள்.

*

பறை இந்திய சங்கீதத்தில் அவநத்த வாத்தியம் என்றழைக்கப்படுகிறது.ஸ்வாதி என்னும் முனிவர் விஸ்வகர்மாவின் துணையுடன் முதன் முதலில் பறைகளை நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது.தமிழில் சொல்தல் என்பதனை அர்த்தப்படுத்தி பறை என்னும் பெயர் பிறந்தது.

வேதகாலச் சடங்குகளில் துந்துபி என்னும் பறை முக்கிய இடம்பெற்றிருக்கிறது.நடனமாடும் சிவன் நடனத்திற்கு லயம் சேர்க்கும்படி டமருகம் என்னும் சிறுபறையை(உடுக்கை)ஒலிக்கிறார்.அதன் ஒலியிலிருந்தே மொழியையும் இசையையும் குறிக்கும் சகல சுரங்களும் தோன்றின என்கிறது தந்திர சாஸ்திரம்.பூதகணங்கள் பல்வேறு பறைகளை ஒலிக்க நந்திதேவர் மிருதங்கம் என்னும் பறையை வாசிக்க சிவன் ஆனந்த நடமாடுவார் என்கிறது வேதம்.

**

இளவேனிற் காலத்தின் ஒருபொழுது.அறுவடை முடிந்த வயல்வெளியில் முன்னிலாவின் மங்கிய வெளிச்சத்தில் உட்கார்ந்திருக்கும் மருதநிலப் பெண்கள் தெரிகிறார்கள்.கிட்டே நெருங்கி வருகிறான்.கிட்டே நெருங்கும்போதே பெருமுழவை கைகளால் முழக்கும் சத்தம் கேட்கிறது கூடவே தண்ணுமையின் சங் சங் என்னும் சத்தமும்.உழவன் மகளிர் வட்டமாக உட்கார்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள்.வளைக்கரங்கள் முழவின் மீது சீரான தாளகதியில் தட்டிக்கொண்டிருக்கின்றன.இரு பெண்கள் துடி என்னும் சிறுபறையை ஒலிக்கிறார்கள்.சற்றே எட்டத்தில் நெருப்பின் சுவாலை தெரிகிறது.ஆண்கள் கூட்டமாக உட்கார்ந்து கள் அருந்திக்கொண்டிருக்கிறார்கள்.

கூடவே பாணர்கள் யாழ்களை மீட்டியும் தண்ணூமை என்னும் பறையை ஒலித்தும் பாடிக்கொண்டிருந்தார்கள்.சற்றுத் தள்ளி சிறு குழுவொன்றின் மத்தியில் தேவராளனும் தேவராட்டியும் சிறுபறைகளைத் தட்டிப் பாடியவாறே குறி சொல்லிக்கொண்டிருந்தார்கள்

***

தொல்காப்பியம் பழந்தமிழர் வாழ்வியலின் கருப்பொருட்களாக தெய்வம்,மரம்,பண்,யாழ் இவற்றோடு பறையையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறது நால்வகை நிலப்பிரிப்புகளான குறிஞ்சி,நெய்தல்,மருதம்,முல்லை ஆகியவற்றுக்கு உரியனவாக தனித்தனி பண்,யாழ்,பறை என்பன குறிப்பிடப்படுகின்றன.

சங்க கால தமிழர் வாழ்வில் பறை முக்கிய இடம்பெற்றதற்கு அகநானூறு,புறநானூறு,நற்றிணை,ஐங்குறுநூறு,கலித்தொகை,பரிபாடல்,குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் சான்றுகள் காணப்படுகின்றன.பறையின் பல்வேறு வகைகளான உடுக்கை,மதாரி,முழவு,தண்ணுமை,துடி போன்றவை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்றன.இவற்றை எந்தவித வேறுபாடுமின்றி சமூகத்தின் பல்வேறு மக்களும் வாசித்துள்ளார்கள்.குழந்தை பிறந்த செய்தி பறை மூலம் அறிவிக்கப்பட்டது.திருமணம் பறையொலியோடு நடந்தது.பிண ஊர்வலம் பறையொலியோடு போனது.

****

சோழன் அரண்மனை வாசல்.ராணியும் தோழிகளும் ஆரத்தித் தட்டுடனும் வாகை மாலைகளுடனும் வாசலில் நிற்கிறார்கள்.கொம்பன் யானையொன்று முரசொன்றை அம்பாரியில் தாங்கியவாறு அசைந்தாடி வருகிறது.முரசுடன் கூடவே அதை அறைபவனும் அமர்ந்திருக்கிறான்.அரசியும் தோழிகளும் நிற்குமிடத்திற்கு வந்தவுடன் யானை மண்டியிடுகிறது.ஆரத்தி சுற்றப்பட்டு செம்பஞ்சுக் குழம்பு பொட்டாக முரசுக்கு சாற்றப்படுகிறது முரசறைபவனுக்கும் உரிய மரியாதைகள் வழங்கப்படுகின்றன.யானை எழுந்து படைவரிசைகளின் முன்னே செல்கிறது எக்காளங்கள் முழங்க படை அணிவகுத்து பல்லவ நாட்டை நோக்கிப் போகிறது.அந்தப் பேரிகைதான் சோழனின் வெற்றியை அறிவிக்கும் முதற்கருவி.

*****
அரசுக்கட்டிலுக்கு இணையாக முரசுக் கட்டில் அமைத்து அதிலே வெற்றிமுரசத்தை இருத்தியது தமிழ் மன்னர் வரலாறு.முரசுக்கு பூசைகள் முதல் பலிகள் வரை வழங்கப்பட்டிருக்கின்றன.முரசுக் கட்டிலில் யாராவது அமர்ந்தால் கொலைத் தண்டனைக்குரிய குற்றம் என்றிருக்க தமிழ்பாடும் புலவன் களைப்பால் தூங்க அரசன் சாமரை வீசியது வரலாறு.அரச ஆணை முதல் மங்கல,அமங்கலச் செய்திகள் வரை பறையறைவோனால் மக்களுக்குச் சொல்லப்பட்டன.பறையறைவோன் மக்களிடையே ராசாவின் பிரதிநிதியாய்த் தோற்றமளித்தான்.

******
மாவிட்டபுரம் கோவில் திருவிழா,உள்வீதியில் உதயசங்கர் குழுவினரின் தவில் முழங்க சுவாமி ஊர்வலம் போனது.காலங்காலமாக பின்பற்றப்படும் நடைமுறை என்று சொல்லி வெளிவீதிக்கும் வெளிவீதியில் உள்ள முதலி மர நிழலில் உட்கார்ந்து பறையொலித்துக் கொண்டிருந்தார்கள் ஒரு குழுவினர்.பறையனும் பறையும் கோவில் உள்ளே போகக்கூடாதாம் சாமிக்கு தீட்டுப் பட்டுவிடுமாம்.வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிய பரமசிவன் மகனுக்கு பறை ஆகாது உவங்கள் விசயம் தெரியாமல் கோவில்லை வந்து பறையடிக்கிறாங்கள்.ஊர்ப்பெரியவர் புறுபுறுத்துக் கொண்டிருந்தார்.

*******

தினைப்புலம்.குறமகள் வள்ளி சிறுபறை அடித்து சோ சோவெனப் பாடிக்கொண்டிருக்கிறாள்.சாதிக்கார முருகன் இல்லாத பொல்லாத விளையாட்டெல்லாம் காட்டி அவளை மயக்க முயன்றுகொண்டிருந்தார்.

********

செல்வச் சந்நதி கோவில் திருவிழா. சந்நதிக்கு எதிரே உரிமையுடன் நின்று பறைமேளச் சமா வைக்கிறது ஒரு குழு சுன்னாகத்திலிருந்து வந்தவர்களாம்.தங்கடை வீட்டுப் பெண் என்ற உரிமையில் வள்ளியின் கோவிலுக்கு எதிரே கொட்டி முழக்குகிறார்கள்.கோவிலைச் சுற்றி பல்வேறு வகையான பறைகள் முழங்கிக்கொண்டிருக்கின்றன.காவடியாட்டமும் பறையொலியும் ஒன்றையொன்று முந்த முயல்கின்றன.குரவையாட்டத்தின் கனவில் பாதிக் கண்மூடிப் பார்த்துக்கொண்டிருந்தார் குறிஞ்சிக் கடவுள்.


**********
சுன்னாகத்திலிருந்து வந்த குழு கால்நடையாகத் திரும்பிப் போயிற்று.பறையுடன் இவர்களை ஏற்ற பேரூந்திலிருந்தவர்கள் அனுமதிக்கவில்லையாம்.கோவிலுக்குப் போய்வரும் வழியில் எதுக்கு தீட்டுச் சாமனில் தொடுவான் என்று அருவருத்தார்களாம்.அவர்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தது அளவெட்டி தவில்க் கலைஞர்களை ஏற்றிய கார்.

************

மதுரையில் ஒரு குக்கிராமம் ஊர்ப் பெரிய மனிதர் சாவீடு.சற்றுத் தாமதமாக வந்ததற்காக அடிவிழுந்து கன்றிப்போன தோளில் பறையின் வார் அழுந்த எரிந்தது.அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் வாசித்துக்கொண்டிருந்தார்கள் தந்தையும் மகனும்.பக்கத்தில் தப்புகளை நெருப்பில் காய்ச்சிக் கொண்டிருந்தனர் தப்பாட்டக்காரர்கள்.செயலில் அவசரம் தெரிந்தது யாருக்குத் தான் அடி வாங்க ஆசை.

**************

லொஸ் ஏஞ்சலில் ஆனந்தன் சிவமணியின் இசை நிகழ்ச்சியொன்று.பல்வேறு பறைகளைப் பரப்பி வைத்து வாசித்துக் கொண்டிருந்தார் பெர்குசன் வாத்தியமென்று இந்திய அமெரிக்கப் பாகுபாடின்றி தலையாட்டி ரசித்தார்கள்.ஒவ்வொரு வகையான பறைகளையும் வாசித்து விட்டு இறுதியாக சாவுக்கூத்து என அழைக்கப்படும் சாவீட்டுப் பறை இசையை வாசித்தார்.அரங்கமே எழுந்து நின்று ஆடியது.முடிந்தவுடன் அவரிடம் கையெழுத்து வாங்க முண்டியடித்தது.

******************

எட்டயபுரம்.
கோவில் வீதி வழியாக "ஊருக்கு நல்லது சொல்வேன்.எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்.அன்பென்று கொட்டு முரசே உலகில் அத்தனை பேரும் சமமாம்" என்று முண்டாசு கட்டிய ஒருவன் பாடிக்கொண்டு போனான்.

*********************
கோவில் யானை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது

10 Comments:

Blogger மாசிலா said...

அற்புதமான பதிவு.
இனிக்கும் தமிழ்.
நல்ல நடை.
மனம் குளிர்ந்தது.
ஓ! முடிந்துவிட்டதா?
அதற்குள்ளா?
சரி.

காலங்கள்
மக்கள்
நாடுகள்
தெய்வங்கள்
சமுதாயங்கள்
கலைகள்
இலக்கியங்கள் ...
அனைத்தையும் அலசியிருக்கிறீர் அருமையாக.

பறை என்றால் கேவலம், அசிங்கம் என்பவர் மாறுவர் மனம்.
'பூங்கா' மின்னிதழ் பொறுப்பாளர் இப்பதிவை கவனிப்பாளர்களாக!

நன்றி.

10:45 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

நன்றி மாசிலா.உங்களன்பிற்கு

3:17 AM  
Blogger நாமக்கல் சிபி said...

அருமையான பதிவு பொடியன்.

பாராட்டுக்கள்.

3:35 AM  
Blogger இளங்கோ-டிசே said...

பொடியன், நல்லதொரு பதிவு. சங்ககாலத்திலிருந்து இன்றைய
காலம் வரை விரிகின்றது உங்களின் இப்பதிவு.
....
பறை அடிப்பது குறித்து இரண்டுவிதமான எண்ணப்பாடுகள் தலித் மக்களிடையே இருக்கின்றது என்பதை இக்கட்டுரை-பறை: கலையா, இழிவா? - கூறுகின்றது.
http://www.keetru.com/dalithmurasu/oct06/parai.html

6:03 AM  
Blogger குமரன் (Kumaran) said...

அருமையான மொழி நடை. அருமையான உள்ளடக்கம். மிகச் சிறப்பாக இருக்கிறது. படித்து மனம் உவந்தது. மிக்க நன்றி.

9:12 AM  
Blogger -/பெயரிலி. said...

ஓட்டமான நடையோடு விரிந்திருக்கிறது இப்பத்தி.

3:11 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

நாமக்கல் சிபி நன்றி.
டிசே தமிழன் நீங்கள் சுட்டிய கட்டுரை வாசித்தேன்.நான் இந்தப் பதிவை எழுதத் தூண்டிய சம்பவம் வேறொன்று.கடந்த மே மாதம் ரொராண்டோவில் நடைபெற்ற மாநாட்டில் பேராளர் லெஸ்லி ஓர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை.அது சங்க காலத்திலிருந்து தமிழ் மன்னர்கள் காலம் வரை பறையும் அதனை வாசித்த மக்களும் எவ்வாறு மாற்றமடைந்து வந்தார்கள் என்பதை ஆய்வு செய்கிறது.அதுவே இந்தப் பதிவுக்குத் தூண்டி.

பறை போன்ற தமிழ் இசைக் கருவிகளின் தொடர்ச்சியை நான் விரும்புகிறேன் ஆனால் கலாச்சார மீளுருவாக்கம் என்ற பெயரில் அதுவே பறையர் என்னும் வகுப்பு தொடர்ந்தும் நிலைபெறக் காரணமாக இருந்துவிடக் கூடாது.

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது 90களின் ஆரம்பம் என நினைக்கிறேஎன் தமிழ் நிகழ்வுகளுக்கு கீழைத்தேய பாண்ட் அணி என்ற பெயரில் மாணவர்கள் பறை,சங்கு,நாதஸ்வரம் என்பவற்றோடு நடத்திய வரவேற்பு அணிவகுப்புகளைப் பார்த்திருக்கிறேன்.அந்த நிலை பரவலாக ஏற்படவேண்டும் பறையை சமூகத்தின் சாதியின் அடையாளமாகப் பார்க்காமல் இசை வாத்தியமாகப் பார்க்கும் நிலை வரவேண்டும்.சமூக ஏற்றத் தாழ்வுகளால் பலநூறு வருடங்கள் பழைமாயன தமிழன் வாத்தியம் ஒழிந்து போய்க்கொண்டிருக்கிறது எனும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது

10:01 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

பெயரிலி அவர்களே ஒரு வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள் என்பது இதைத்தானா?

ரிஷ்ய பிரபந்தனை/சரியா? ஞாபகம் இருக்கிறதா?

10:03 PM  
Blogger பூங்குழலி said...

நெடுநாட்களுக்குப் பிறகு நான் வாசித்து மகிழ்ந்த பதிவு.
மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத்தோன்றும் அழகுத்தமிழ் நடை.

அதற்காக ஒரு படியும் எடுத்துக்கொண்டாகிவிட்டது.

பதிவை பதிந்தமைக்காக மனமார்ந்த நன்றிகள்..

1:46 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

நன்றி பூங்குழலி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

1:07 AM  

Post a Comment

<< Home