Sunday, November 05, 2006

உங்களுக்கு என்ன பிடிக்கும்?

உங்களுக்கு என்ன பிடிக்கும்?இது என்னைப் பார்த்து கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்ட கேள்வி.அவர் மட்டுமல்ல சிறிது நேர உரையாடலின் பின் எவரும் சர்வ சாதாரணமாகக் கேட்கும் கேள்வி இதுதான்.

எதிரில் உரையாடிக் கொண்டிருப்பவரை எடைபோட மிக எளிதான வழி இந்தக் கேள்வி என்கின்றன உளவியல் ஆராய்ச்சிகள்.ஒருவருக்குப் பிடித்தது பிடிக்காததை வைத்து அவரை மிகச் சுலபமாக அணுகலாம் என்கின்றன அவை

இந்தக் கேள்வியை என்னிடம் யாராவது கேட்கும் போதெல்லாம் மிகச் சங்கடமாக உணர்கிறேன்.எனக்குப் பிடித்ததுதான் என்ன என்பது இன்றுவரை விடை தெரியாக் கேள்வியாக இருக்கிறது.விவரம் தெரிந்த நாள்முதல் என்னையே நான் கேட்டு வரும் கேள்விதான் இது ஆனாலும் இன்றுவரை விடை தெரியவில்லை.

என்னுடைய நண்பர்கள் சிலரைப் பார்க்கிறேன் ஒவ்வொருத்தரும் தன்னுடைய துறை என்ன,பொழுதுபோக்கு என்ன,விளையாட்டு என்ன,பிடித்த சாப்பாடு என்ன என்று வகைப்படுத்தும்போது ஆச்சரியமாக இருக்கும்.எப்படி இவற்றை வகைப்படுத்துகிறார்கள்?அறிவியலின் படி பிடித்தது பிடிக்காதது என்பது முதன் முதலில் உங்களுக்கு ஏற்படும் அனுபவத்தின் அடிப்படையில் எழுபவை.
நண்பர் ஒருவர் இருக்கிறார் இதுவரைக்கும் பாகற்காயைச் சாப்பிட்டதே இல்லை ஆனால் பாகற்காய் தனக்குப் பிடிக்காது என்கிறார்.கசப்புத் தான் அவருக்குப் பிடிக்கவில்லையா என்றால் பாகற்காயை விட கசப்பானவற்றை அவர் விரும்பி உண்பதைப் பார்த்திருக்கிறேன்.எங்கிருந்து வருகிறது இந்த வேண்டுதல் வேண்டாமை.

இன்னொருத்தர் இருக்கிறார் அவருக்கு ஐஸ்கிறீம் மிக விருப்பம்.உங்களுக்கு மிகவிருப்பான பொருளை அளவுக்கதிகமாக விரும்பிச் சாப்பிடுவீர்களா இல்லையா?இவர் சாப்பிடமாட்டார் கேட்டால் அப்படிச் சாப்பிட்டால் விருப்புக் குறைந்து விடுமாம் எப்போவாவது அருமையாகச் சாப்பிட்டால் தான் அது என்றைக்கும் விருப்பமானதொன்றாக இருக்குமாம்.எதை வைத்து தனக்கு ஐஸ்கிறீம் பிடிக்கும் என முடிவு செய்கிறார் இவர்.

விருப்பு வெறுப்பு மட்டுமல்ல ரசனையும் ஏதோ ஒருவகையில் வழக்கம் சார்ந்தது என நினைக்கிறேன்.திடீரென ஒருவர் கர்நாடக இசைப்பிரியராகவோ கலைப்பட ரசிகராகவோ மாறிவிடச் சாத்தியமில்லை.ஏதாவதொரு நெகிழ்ச்சியானதொரு தருணத்தை அல்லது கணத்தை இசையோ,படமோ அல்லது ஒரு கவிதையோ உருவாக்கிவிடும்போது அவர் அதனைத் தனக்கு அணுக்கமானதாகக் காண்கிறார் அதை தனது விருப்பத் தேர்வாகக் கொள்ள ஆரம்பிக்கிறார்.அதையொத்தவை மீதான நாட்டம் நாளடைவில் ரசனையாக மாறிவிடுகிறது.

இது சாதாரண மனித உளவியலைப் பொறுத்தளவில் சர்வசாதாரணமான செயற்பாடு.ஆனால் உண்மையில் பார்த்தொமானால் மூளையின் ஞாபகப் பரப்புகளில் சிறிதாக நாங்கள் ஏற்படுத்தும் விகாரம் அந்த விகாரம் இசையை ரசித்தல்,கவிதையை நயத்தல் என்று மென்விகாரமாகவும் இருக்கலாம் அல்லது ஒரு கொலையொன்றை விரும்பிச் செய்தல்,அல்லது உங்களை அறியாமலே திருட்டின் மீது நாட்டம் என்று வன்விகாரமாக இருக்கலாம்

பல்வேறு பிரபலங்களுக்கு சிறு சிறு பொருட்களைத் திருடுவது மிக உவப்பானதொன்றாக இருந்திருக்கிறது.பல தொடர் கொலைகளைச் செய்தவர்களை விசாரித்த உளவியல் நிபுணர்கள் அவர்களுக்கு அந்தக் கொலையைச் செய்ததற்கான காரணம் எதுவும் இல்லை என்கிறார்கள்.

இந்தத் திருட்டுகளையோ கொலைகளையோ செய்தவர்கள் அதனை நாம் இசையை ரசித்தல் போலவும் ஓவியத்தை ரசித்தல் போலவும் ரசனைக்குரியதொன்றாகவே அவற்றைச் செய்திருக்கிறார்கள்.அவர்களை விசாரிக்கும் உளவியல் நிபுணர்கள் அவர்களுக்கு மெலிதான மனநோய் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள் என்றால் நாங்களும் ஒருவகையில் மனநோயாளர்கள் தாமே இல்லையா?நிர்ச்சலனமாக இருந்த மூளைக்குள் இது எனக்குப் பிடிக்கும் இது எனக்குப் பிடிக்காது என்று திணித்து வைத்துவிட்டு பின்னர் அதன் கட்டளையை ஏற்றுச் செயற்படுகிறோம் இல்லையா.

இப்போது என்னுடைய பிரச்சனைக்கு வருவோம்.எனக்குப் பிரச்சனையே எனக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்று வரையறை செய்து கொள்ள முடியாமல் இருப்பதுதான்.எதுவுமே பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை எனது மூளை எதையும் திணிக்க அனுமதிக்கவில்லை விகாரமடையாத மூளை என்று சந்தோசப்பட்டுக் கொள்ளலாம் ஆனால் எனக்கோ எல்லாமே பிடித்திருக்கிறதே அதுதான் பிரச்சனை

சங்கீதம் பிடித்திருக்கிறது அது கர்நாடகமா,ஹிந்துஸ்தானியா,மேலைத்தேயமா என்றால் மூன்றுமே பிடிக்கிறது,ஆக்க இலக்கியத்தின் எல்லாக் கூறுகளும் பிடிக்கின்றன.நிறைய வள வளவென்று பேசவும் பிடிக்கிறது பேசாமல் மோனத் தவத்தில் ஆழவும் பிடித்திருக்கிறது.படங்கள் பிடிக்கின்றன,பரதநாட்டியம் பிடிக்கிறது டப்பாங்குத்தும் பிடிக்கிறது.

ஒருவர் எனக்கு என்ன பிடிக்கும் என்று என்னைக் கேட்கும்போது இவற்றில் எதைச் சொல்வது எதை விடுவது என்பது தலைபோகிற விடயமாக இருக்கிறது.சிலநேரங்களில் நான் எனக்கு இவை பிடிக்கும் எனச் சொல்வது என்னைப் பற்றிய பிம்பமொன்றை எதிராளிக்கு உருவாக்கிவிடுகிறது என்றால் பலநேரங்களில் எனது தேர்வுகளாக அவ்வப்போது நான் சொல்பவை எதிராளி தன்னைப் பற்றி என்னுள் ஏற்படுத்த நினைக்கும் பிம்பத்திற்குச் சாதகமாய் அமைந்துவிடுகின்றன

சில இடங்களில் எனக்குப் பிடித்தவையாக வாய்க்கு வந்ததைச் சொல்லிவிடுகிறேன்.இப்படித்தான் ஒருமுறை ஒருவர் கேட்டார் தம்பிக்கு என்ன பிடிக்கும்.நானும் இசை,இலக்கியம் என்பவற்றோடு ஓவியம் என்று சொல்லிவிட்டேன்.வந்தவர் ஒரு ஓவியர் யாருடைய ஓவியம் பிடிக்கும் பிக்காசோ,அஞ்சலோ என்று பேச ஆரம்பித்தார் ரவிவர்மாவின் ஓவியங்கள் பற்றிப் பேசினார்,எம்.எப்ஹுசைனின் ஓவியங்களில் தனக்கிருக்கும் விமர்சனத்தைச் சொன்னார் எனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டார் நான் குறிப்பாக இவர் என்று இல்லை எல்லா ஓவியர்களையும் பிடிக்கும் என்றேன்.

அவரும் விடாக் கண்டனாக ஓவியங்களின் சில முறைகளைச் சொல்லி அவற்றுள் எது பிடிக்கும் என்றார்.நான் திரும்பவும் எனக்கு இவைதான் என்றில்லை எல்லாமே பிடிக்கும் என்றேன் நீங்கள் சொல்லுறபடி பார்த்தால் யாருக்குத்தான் ஓவியம் பிடிக்காது என்ற அவரது கேள்வியில் நிர்வாணமானதொரு உணர்வு வந்தது.

அவருக்கு ஓவியம் பிடிக்கும் என்று சொல்லாமல் விட்டிருக்கலாம் ஆனால் எனக்கு ஓவியம் பிடித்திருக்கிறதே எப்படிச் சொல்லாமல் விடுவேன் அவற்றைப் பார்க்கப் பிடித்திருக்கிறது நாம் பார்க்கும் கோணத்திலிருந்து வேறுபடும் கோணம் பிடித்திருக்கிறது.இதை அவரிடம் சொன்னால் என்னைப் பைத்தியம் என்று நினைத்தாலும் நினைக்கலாம் அவரைப் பொறுத்தவரை ஒன்றை ரசிப்பதற்கு அதைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டும் என்னைப் பொறுத்தவரை ஒன்றை ரசிப்பதற்கு ஒன்றுமே தெரிந்திருக்கத் தேவையில்லை.

பாமரத் தன்மைதான் ரசிகனின் முதன்மையான அடிப்படைத் தகுதியென்பேன் நான்.நிர்ர்சலனமான மூளையின் பரப்புகளில் ஒரு படைப்போ,பாட்டோ,இயற்கையின் ஒரு எழிற்கோலமோ ஏற்படுத்தும் அதிர்வுதான் உண்மையான ரசிப்பு.
மற்றவையெல்லாம் செயற்கையான திணிப்பு அல்லது போலச் செய்தல்கள் தான்.
இவற்றுள் பல அந்தஸ்து கருதி நாம் ஏற்படுத்திக் கொண்ட பழக்கங்கள் தான்.

சில நேரங்களில் நான் இவ்வாறு நிர்வாணமாக நிற்க நேரிடுகிறதென்றால் பலநேரங்களில் பலர் எனக்கு முன்னால் அவ்வாறு நிர்வாணமாவதைப் பார்க்க நேரிடுகிறது.எனக்கு இசை பிடிக்குமென்று சொன்னால் இசையைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் ஒருவர்.கலைப்படங்கள் பிடிக்குமென்றால் தான் முந்தாநேற்றுப் பார்த்த படம் ஒன்றைப் பற்றி தப்பும் தவறுமாகச் சொல்ல ஆரம்பிக்கிறார் ஒருவர்.

இது மிகச் சங்கடமானதொன்று.ஆனால் எம்முடைய உளவியல் நூல்களோ ஒருவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து அவரை அணுகுங்கள் என்கின்றன.

என்னை மாதிரி முற்றாக குழப்பமான ரசனை உள்ளவர்களுக்கு(முற்றாகக் கழண்டதென்றும் சொல்லலாம்)இது எந்தளவு பலனளிக்கும் என்று தெரியவில்லை


உங்களுக்கு என்ன பிடிக்கும்?இந்தக் கேள்வியையே கேட்டிராவிட்டால் இருவருக்கும் பொதுவானதொரு ரசனைப் புள்ளியை நாமாகவே விரைவில் கண்டடைந்துவிடுவோமென்று தோன்றுகிறது

5 Comments:

Anonymous Anonymous said...

நல்ல பதிவு.நன்றி

6:41 PM  
Blogger துளசி கோபால் said...

எனக்கும் எல்லாமெ பிடிக்கும். அப்ப நான் என்ன சொல்லுவது? :-)))


நல்ல பதிவு.

8:06 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

நன்றி gana

நன்றி துளசி,எல்லாமே பிடிக்கும் என்றால் என்னைப் போல் உங்களுக்கும் கோளாறு கொஞ்சம் அதிகம் என்று அர்த்தம்

3:06 AM  
Anonymous Anonymous said...

/*
என்னைப் பொறுத்தவரை ஒன்றை ரசிப்பதற்கு ஒன்றுமே தெரிந்திருக்கத் தேவையில்லை.
*/

dude, I agree.

11:49 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

சபை நாகரிகம் கருதி அநாமதேய நண்பரின் பின்னூட்டம் மட்டுறுத்தப் பட்டுள்ளது

2:48 PM  

Post a Comment

<< Home