Wednesday, November 22, 2006

மந்திர விரல்களின் சொந்தக்காரன்

யாழ்ப்பாணத்தில் கோவில்களில் திருவிழாக் காலங்களில் நாதஸ்வர தவில் கச்சேரிகள் முக்கிய இடம்பிடிக்கும்.ஒவ்வொரு திருவிழா உபயகாரரும் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு சோடி மேளம் நாலு சோடி மேளம் என்று ஏற்பாடு செய்வார்கள் அந்தக் கச்சேரிகளின் ரசிகர்களில் நானும் ஒருவன் அப்படியான கச்சேரிகளில் என் கவனத்தைக் கவர்பவை தந்தையும் மகனுமாக வாசிக்கும் கச்சேரிகள்.அளவெட்டி ஊரில் நிறைய தந்தை/மகன் தவில்க்குழுக்கள் இருந்தன அவர்கள் வாசிக்கும்போது மற்றவர்கள் வாசிப்பதை விடச் சுவாரசியமாக இருக்கும்.

அப்படியொரு கச்சேரி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.பிரபலமான இரு தந்தை/மகன் தவில் கலைஞர்கள் நாதஸ்வரங்களின் சுரவரிசையில் மெல்ல ஆரம்பிக்கிறது தந்தைக்கும் மகனுக்குமான போட்டி போட்டியென்றால் தனியே தவில் வாசிப்பது மட்டுமல்ல அவர்களது முக பாவங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.ஒரு நாதஸ்வரமும் தந்தையும் இன்னொரு நாதஸ்வரம் மகனும் என ஸ்வர வரிசைகளுக்கு தவில் வாசிக்கிறார்கள் எப்படித் தெரியுமா?
தவிலில் ஒரு ஆவர்த்தனத்தை வாசித்து விட்டு தந்தை மகனைப் பார்ப்பார் எப்படி என் வாசிப்பு.மகன் அதே ஆவர்த்தனத்தை அச்சொட்டாக வாசிக்கவேண்டும்.மகன் விடுவாரா என்ன அவரும் அப்படியே வாசித்து விட்டு எப்படி என்று இவரைப் பார்க்கிறார்.இவர் இன்னும் ஒரு புது ஆவர்த்தனம் வாசித்து விட்டு கழுத்தை நீட்டி இவரைப் பார்க்க அவர் புன்னகைத்தவாறே அதை ஒத்து வாசிக்கிறார் வாசித்து முடிக்க ஆமோதிப்பதுபோல தந்தை தலையசைத்துவிட்டு திரும்ப இன்னுமொரு ஆவர்த்தனம்.

இப்படியே தொடர்ந்து தனி ஆவர்த்தனம் வருகிறது.நாதஸ்வரங்கள் இசைப்பதை நிறுத்திக் கொள்கின்றன தந்தைக்கும் மகனுக்கும் போட்டி உச்சத்தை அடைகிறது இருவரும் தவிலை வைத்து என்னென்னவோ வித்தை காட்டுகிறார்கள் அவர்களின் முகபாவமோ நடிகர் திலகத்தையும் மிஞ்சி விடுவதாக இருக்கிறது.வாசிப்பு உச்சத்திற்குப் போகும்போது தந்தை திடீரென்று நிறுத்திவிடுகிறார் கண்களிலிருந்து நீர்த்துளிகள் சிதறுகின்றன மகனது வாசிப்புக்கு தந்தையின் பெருமிதமும் அங்கீகாரமும் அது.மகன் மெதுவாக தந்தையை அணைத்துக் கொள்கிறார் உணர்சிகரமான அந்தர்ச் சம்பவத்திற்கு சாட்சியாய் நின்றதே அபூர்வமானதொரு தருணமாக என் மதில் பதிந்துபோய் விட்டது.

@@@@
நாடு விட்டு நாடு சென்று பலவருடங்களின் பின்னர் மீண்டும் அந்த தருணத்தை மீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது இன்னொரு தந்தை மகன் வடிவில் அவர்கள் அல்லா ராக்கா ஜாகீர் உசேன்.

இந்தியாவின் இருபெரும் தபேலா மேதைகளான இருவரது தபேலா வாசிப்பையும் ஒலி வடிவில் கேட்டிருக்கிறேன் ஒளி வடிவில் பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் தான் கிடைத்தது

தந்தையும் மகனும் இரு தபேலாக்களுடன் உட்கார்ந்திருக்கிறார்கள்,தந்தையின் தபேலா மரத்தினால் செய்யப்பட்ட பாரம்பரிய வடிவம் மகனுடையது உலோகத்தினால் செய்யப்பட்டு கொஞ்சம் நவீனம் பின்னணியில் ஒரு தம்புராவும் சாரங்கியும் உறுத்தாத வகையில் சுருதி கூட்டுகின்றன ஒரு நேரடி ஒளிபரப்பின் ஒரு பகுதியைத் தான் நான் பார்த்தேன் முழுமையான ஒளிபரப்புக் கிடைக்கவில்லை.அதுவே போதுமாக இருக்கிறது தந்தை/மகன் பாசத்தையும் தபேலா வாசிப்பையும் பரிமாறிக்கொள்ளும் காட்சியைப் பார்த்து அந்த நெகிழ்வான தருணத்தை மனதிருத்திக் கொள்வதற்கு.உஸ்தாத் அல்லா ராக்கா இந்தியாவின் ஒரு மூலையில் இந்துஸ்தானி இசைக்கும் மற்றைய இசைக்கருவிகளுக்கும் பக்கவாத்தியமாக இருந்த தபேலாவை உலகெங்கும் கொண்டு போனவர்.தபேலாவைப் பக்க வாத்தியமாக மட்டுமன்றி தனி வாத்தியமாகக் கூட வாசிக்கலாம் என்பதை பிரபலப்படுத்தியவர்.இன்றைய காலகட்டத்தில் தபேலாவின் ஈடு இணையற்ற கலைஞன் ஜாகீர் உஷேனின் தந்தை.1919ஆம் ஆண்டு ஜம்முவின் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த அல்லா ராக்கா தனது 12 ஆவது வயதில் தபேலாவைக் கற்க ஆரம்பித்து இருபத்தியோராவது வயதில் அகில இந்திய வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞராக இணைகிறார்.அதன் பின்னர் நாலைந்து வருடங்களில் இந்தித் திரைப்பட உலகிற்கு திரை இசை அமைப்பாளராக அறிமுகமாகினார்.1960 ல் மேதை ரவிஷங்கரின் ஆஸ்தான பக்கவாத்தியக் கலைஞனாக இடம்பிடித்துக் கொள்கிறார்.

அதுவரை காலமும் தாளவாத்தியமான தபேலா சிதார்,ஷெனாய்,புல்லாங்குழல் போன்ற வாத்தியங்களுக்கும் பீம்சென் ஜோஷி,கிரிஜாதேவி போன்ற பாடகர்களுக்கும் பக்க வாத்தியமாகவே இருந்து வந்தது அதற்கென்று தனியொரு மதிப்பை உருவாக்கியவர் அல்லா ராக்கா ஸாரங்கி முதலிய வாத்தியங்களின் துணையுடன் தபேலாவில் கச்சேரி வாசிக்கும் முறையையும் பிரபலமாக்கியவர்

அல்லா ராக்கா ரவிஷங்கருக்கு மட்டுமன்றி இன்னொரு மேதையான valayat khan க்கும் தபேலா வாசித்திருக்கிறார்.அதுமட்டுமன்றி பல்வேறு இந்துஸ்தானி,கர்னாடக இசைக்கலைஞர்களுக்கும் வாசித்திருக்கிறார் அதன் மூலம் தபேலாவை கர்னாடக சங்கீதத்தில் புகுத்தி அதன் மூலம் இரண்டு சங்கீதப் பிரிவுகளுக்கும் பாலம் அமைத்தவர் என்று குறிப்பிடுகிறார்கள்.மதுரை மணி ஐயருக்கு அல்லா ராக்கா பக்கவாத்தியம் வாசித்த இசைத்தட்டு ஒன்றுகூட என்னிடம் உண்டு

மகன் ஜாகீர் உஷேனுடன் இணைந்து உலகநாடுகள் பூராவும் சுற்றுப்பயணம் செய்து அல்லா ராக்கா நடத்திய Tabla duet நிகழ்ச்சிகள் தபேலா ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்று இந்துஸ்தானி ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பெரிதாகப் பேசப்பட்டவை.அவற்றுள் முக்கியமானது ஜேர்மனியில் விடிய விடிய நடந்த Indian music night நிகழ்வில் தந்தையும் மகனுமாக ஒருமணிநேரம் வாசித்த Tabla duet-Theen taal

அப்படியொரு நிகழ்வு(கல்கத்தாவில் நடைபெற்றது) ஒன்றின் ஒளிப்பதிவையே நான் பார்த்தேன்.மிகவும் உணர்வுபூர்வமானதொரு நிகழ்வு அது அதற்கு முன்பே தந்தை மகன் இணைந்து வாசித்த மூன்று வெவ்வேறு இசைத்தட்டுகளைக் கேட்டிருக்கிறேன்.அதை விட அல்லா ராக்காவின் தனியிசைகள் சிலவற்றையும்,ஜாகீர் உஷேனின் தனியிசைகளையும் கேட்டிருக்கிறேன் இரு மேதைகளையும் அதுவும் அப்பா மகன் என்ற உறவு முறையோடு ஒருங்கே கேட்பது சுகமான அனுபவம்.பொக்கை வாய் நிறையச் சிரிப்புடன் அல்லா ராக்கா வாசிப்பதையும் ஒரு சிறுவனின் குதூகலத்துடன் ஜாகீர் உஷேன் அப்பாவுக்கு இணையாக நடப்பதையும் காண்பதும் மனநிறைவான அனுபவம்

முதன் முதலில் Tabla duet என்ற பெயரைக் கேட்கும் போது என்னடா இது என்று நினைத்தேன் கேட்ட பிறகுதான் இரண்டு தபேலாக்களும் இணையும் இந்த நிகழ்வுக்கு என்ற பதத்தைத் தவிர வேறெந்தப் பதமும் பொருத்தமாகவே இருக்காதெனத் தோன்றியது.இரண்டு தபேலாக்களுடனும் இருபது விரல்கள் கூடுவதும் பிரிவதும் அவற்றிலிருந்து பிறக்கும் ஒலி இணைவதும் பிரிவதும் ஊடுவதும் கூடுவதும் ஒன்றையொன்று துரத்துவதும் இணைந்து சிறு தூரம் பிரயாணிப்பதும் ஒன்றைவிட்டு ஒன்று நிற்பது போலப் போக்குக் காட்டுவதுமாக கேட்பவரைக் கட்டிப் போட்டுவிடும் நிகழ்வு Tabla duet

ஜாகீருடன் மட்டுமன்றி இன்னொரு மகனான பாசல் குறேஷியுடனும் அல்லா ராக்கா தபேலாக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார்
கிழக்கும் மேற்கும் இணைவு என்ற கருப்பொருளில் அமெரிக்காவின் பிரபல Jaaz Drummer Buddy rich உடன் இணைந்து அல்லா ராக்கா உருவாக்கிய 'Buddy a la rakha' இசைத்தொகுப்பு இந்தியாவைத் தாண்டியும் பேசப்பட்டது

"Tabla உலகின் ஐன்ஸ்டீன் அல்லா ராக்கா" என்று மறைந்த Drummer mickey hart அல்லா ராக்காவைப் பாராட்டியதோடு அல்லாமல் அவரை தனது குருவாகவும் அறிவித்திருக்கிறார்.

தந்தை மகன் இணைந்து படைத்தவற்றுள்Together,shared moment,maestro's choice ஆகிய இசைத்தட்டுகளும் சில உதிரிகளும் என்னிடம் உள்ளன அவற்றுக்கு விரிவான விமர்சனம் எழுத எனக்கிருக்கும் தபேலா அறிவு போதாது

அல்லா ராக்கா ஜாகீர் இணைந்து வழங்கிய அல்லது தனியே அல்லா ராக்கா வாசித்த தீன் தால்-விளம்பித காலம் கேட்டுப்பாருங்கள் அல்லா ராக்காவை மந்திர விரல்களின் சொந்தக்காரனென்று ஏன் சொல்கிறார்கள் என்பது புரியும்

6 Comments:

Anonymous johan -paris said...

தந்தையின் லயத்தை ரவி சங்கரின் இசைத்தட்டில் கேட்டுள்ளேன்; மகனை பாரிசில்; கர்நாடக இசை வயலின் சகோதரர்கள் "குமரேஸ்-கணேஷ் - கடம் விநாயகராமுடன்" பார்த்துக் கேட்டுள்ளேன். பல உலக இசை நுணுக்கங்களை இசைத்துப் பரவசப்படுத்தினார்.
தங்கள் விமர்சனம் வெகு நேர்த்தி!!!
எங்கள் தவில் கூட இந்த அளவை எட்டும்; ஆனால் இந்தியாவில் தென்னிந்தியக் கலைகளுக்கு இருட்டடிப்பு மிக அதிகம். அத்துடன் இக் கலைஞர்கள் பிராமணர்கள் அல்ல; இக்கலையைச் சாதியூடு பார்க்கிறார்கள். இலங்கையோ அதோ கதி!!
யோகன் பாரிஸ்

3:02 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

நன்றி யோகன்.தட்சணாமூர்த்தி,உதயசங்கர் என்று எங்களூர்த் தவில் கலைஞர்களைப் பற்றி எழுதும் எண்ணமுள்ளது பார்ப்போம் எவ்வளவு சாத்தியமாகின்றது என

7:18 AM  
Blogger மலைநாடான் said...

அருமையான ஒருபதிவு. இன்றைய சூழலில் மனதுக்கு ஆறுதலான பதிவும் கூட.

மிக்க நன்றி

7:47 AM  
Anonymous Anonymous said...

Tabla Duet - Father & Son

4:40 PM  
Anonymous Anonymous said...

Tabla Duet - Ustad Alla Rakha & Zakir Hussain

4:43 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

கருத்து தெரிவித்த மலைநாடன் சுட்டி கொடுத்த அநாமதேய நண்பர் இருவருக்கும் நன்றி.

மலைநாடன் தமிழ்மணம் பற்றி எரிகையில் தபேலா வாசித்தானாம் ஒரு பொடியன் என்கிறீர்களா?

5:21 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home