Wednesday, December 13, 2006

ஈரோஸ் இரத்தினசபாபதி காலமானார்

ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான இரத்தினசபாபதி(மற்றவர் சங்கர் ராஜீ)இன்று லண்டனில் காலமானார்.

ஈழத்தில் இனப்பிரச்சனை கொழுந்துவிடத்தொடங்கிய 1975ம் ஆண்டு தனது மார்க்சியக் கொள்கைகளின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயலப்போவதாகக் கூறி ஈழ மாணவர் புரட்சிகர முன்னணியை லண்டனில் ஆரம்பித்தவர் இரத்தினசபாபதி,சமநேரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணி,பிரபாகரன் குட்டிமணி ஆதியோர்,சத்தியசீலன் சிவகுமாரன் ஆதியோர் என்று பலதரப்பட்ட இளைஞர்களும் ஈழப்பிரச்சனைக்கு ஆயுதப் போராட்டமே தீர்வு என்ற முடிவுக்கு வந்து கொண்டிருந்த காலப்பகுதி அது.

முற்றுமுழுதாக மார்க்சிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்,கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களையும் முஸ்லிம்கள்,மலையக தமிழ் இளைஞர்களையும் உள்ளடக்கி சிந்தனைப் படையாக ஆரம்பிக்கப் பட்டது ஈரோஸ் இயக்கம்.அதுவே முதன் முதலில் பாலஸ்தீன,லெபனான் விடுதலைப் படைகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தாம் பயிற்சி பெற்றதோடு புலிகள் மற்றும் ரெலோ இயக்கத்தினருக்கும் பயிற்சிகளை வழங்கி வந்தது.இவற்றுக்கு மூலகாரணம் இரத்தினசபாபதியும் அவரது வெளியுலகத் தொடர்புகளும்.

இலண்டனில் இருந்துகொண்டே ஈழத்தில் போராட முடியுமா என்று பலமான விமர்சனத்திற்கு உள்ளானாலும் இயக்கத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு அதில் இணைந்தவர்கள் பலர் பாலகுமாரன்,அருளர்,கிபி அரவிந்தன் போன்றோர் அதில் முக்கியமானவர்கள்.

இனப்பிரச்சனை சூடுபிடித்த எண்பதுகளில் ஈரோஸ் இயக்கம் சிந்தனைத் தளத்திலேயே ஈழத்தை வெல்லலாம் என்று தீவிரமாக நம்பியதால் அதனுடன் அதிருப்தியுற்ற அதன் மாணவர் அமைப்பு பிரிந்து போய் ஈபிஆர் எல் எப் ஐ ஆரம்பித்தது,அதிலிருந்து கிளைத்தவையே ஈபிடிபி,ஈ,என்டிஎல் எப்

பின்னர் காலப்போக்கில் ஈரோசின் தோழர்கள் பலரும் புலிகளுடன் சேர்ந்துவிட சங்கர் ராஜி தொடர்ந்தும் ஈரோஸ் என்ற பெயருடன் செயற்பட்டு வந்தார்.

இன்று ஈழப்போராட்டம் திசைவழிப்பட்டு கிளைபிரிபட்டு வளர்ந்து வந்துள்ள வேளையில் அதன் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான இரத்தினசபாபதி ஈழப்போராட்டத்தில் தனது சாட்சியத்தை நூலாக வெளிக்கொணர வேண்டுமென்ற எனது வேணவா கனவாகவே போய்விட்டது.இனிமேலும் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு மூத்தவர்கள் தங்கள் போராட்ட வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முன்வராவிடின் ஈழப்போராட்ட வரலாறு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளினது வரலாறாக ஒற்றைத் தன்மையுடன் எழுதப்படுவதையோ அல்லது மறுதலையாக தலை இருக்க வாலாடின கணக்காக முகம்தெரியாதவர்களெல்லாம் தான் தான் ஈழப்போராட்டத்தை ஆரம்பித்தேன் என்று உரிமை கொண்டாடுவதையோ தடுக்க முடியாது.அதற்கு நல்லதொரு உதாரணம் ஏற்கனவே வெளிவந்திருக்கும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல்.


ஈழத்தை வெல்வதற்கு ஈரோஸ் வைத்திருந்த கொள்கைத் திட்டங்களும் அதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசிக்கக் கிடைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.அதன் அடிப்படையில் பார்த்தால் எண்பதுகளிலேயே நாம் ஈழத்தை வென்றிருக்கவேண்டும் இன்றும் போராட்டம் தொடர்கிறது என்றால் எங்கேயோ சில தவறுகள் சரிசெய்யப்படாமல் போய்விட்டதாகத் தோன்றுகிறது(இந்த வரியை மட்டும் வைத்துக்கொண்டு மாற்றுக்கருத்து அன்பர்கள் கிளித்தட்டு விளையாட வரவேண்டாம் உங்கள் கருத்து கருத்தாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பின்னூட்டத்தை அனுமதிப்பேன்)

அதேவேளையில் முற்றுமுழுதாக மார்க்சியக் கொள்கைகளை வைத்துக்கொண்டே இனவிடுதலைப் போராட்டத்தை நடத்திவிட முடியுமா என்பதும் விவாதிக்கப்படவேண்டியது ஏனெனில் தேசியம் பற்றிய மார்க்ஸ்,மற்றும் லெனினின் கூற்றுகள் பலராலும் இஷ்டத்திற்குத் திரிக்கப்பட்டு தோழர்களால் விரும்பியபடி பயன்படுத்தப்படுவதை பார்த்திருக்கிறேன்

அதேபோன்று ஈரோஸ் காலகட்டத்தில் நடந்த மாதிரி பகிரங்க விவாதங்கள் இன்றைய காலகட்டத்தில் சாத்தியமற்றுப் போனதற்கு விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என்றாலும் ஜனநாயக முகமூடி போட்டுச் சுரண்டிக் கொழுக்கும் மாற்றுக் கருத்தாளர்களும் காரணம் என்றுதான் சொல்லவேண்டும் எங்கேயேனும் ஒரு தளத்தில் விவாதத்தை ஆரம்பித்தால் ஒன்று புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு.இரண்டையும் விட்டு விட்டு ஈழப்போராட்டத்தின் வெற்றி அல்லது தோல்வி பற்றி அது ஆரம்பமாகி 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் போகிற இந்த நேரத்திலாவது ஒரு நேர்மையான விவாதத்தை நடத்த முடியாதா எனக் கேட்க விரும்புகிறேன்

4 Comments:

Anonymous Anonymous said...

தகவலுக்கும், பின்னணி செய்திகளுக்கும் நன்றி பொடியன். வருத்தங்கள்.

--FD

7:54 AM  
Blogger கானா பிரபா said...

இரத்தினசபாபதி எங்களூரவர் என்ற வகையில் நல்ல அறிமுகம் உண்டு, 1989 தேர்தலில் நான் கண்ட தேர்தல் பிரச்சார அனுபவம் குறித்து ஒரு பதிவை இந்த வார இறுதிக்குள் தர இருக்கின்றேன்.
அன்னாருக்கு என் அஞ்சலிகள்

1:58 PM  
Anonymous Anonymous said...

காலையிலே சித்தர் பதிவிலே செய்தி கண்டேன். அவர் பிற நாடுகளின் விடுதலையியக்கங்களுடன் ஈழ இயக்கங்களைத் தொடர்பு செய்ய முயன்றதும் ஆயுதப்பயிற்சிக்கான ஆரம்பவழிவகை செய்தது ஆகியன பதியப்படவேண்டும்.

2:57 PM  
Anonymous Anonymous said...

ஈழப்போரட்டத்தில் பங்குபற்றிய இன்னொரு இயக்கத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்தப் பதிவு உதவியுள்ளது.

ஈழப்போராட்டத்தில் பங்கு பற்றிய பல்வேறு இயக்கங்களின் வரலாறுகள் கால ஓட்டத்தில் அழிந்து போய்விடும் என நீங்கள் கருதுவது வாசிக்கும் பொழுது தெரிகிறது. இப்பொழுது நீங்கள் ஈரோஸ் பற்றி மட்டும் கதைப்பதால் அதைப்பற்றி மட்டும் பேசுவோம். பிறிதொரு முறை மற்றைய இயக்கங்கள் பற்றியும் பேசலாம்.

ஈரோஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர் இரத்தினசபாபதி மட்டுமே. சங்கர் ராஜி அதன் நிறைவேற்றுக் குழுவில் இருந்தவர்.

நீங்கள் குறிப்பிட்டது போல ஈரோஸ் இயக்கம், விடுதலைப் புலி மற்றும் ரெலோ இயக்கங்களுக்கு பயிற்சி அளித்ததென்பது உண்மையல்ல. இயக்கங்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி ஸ்தாபிக்காத, முற்று முழுதாக தமிழ் இளைஞர் பேரவை போன்ற தமிழ் அமைப்புக்களோடு தொடர்பாய் இருந்த வேளையில்தான் ரத்னா ஆயுதப் பயிற்சிக்காக உமா மகேஸ்வரனையும் ஈரோஸ்-இல் இருந்த சங்கர் ராஜி, பத்மநாபா மற்றும் சிலரையும் பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் கொண்டுள்ள தொடர்புகளால் ஆயுத பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

ஈரோஸ்-இல் இருந்த பத்மநாமா EPRLF-ஐ ஆரம்பித்தார் என்பது, ஈரோஸ் கருத்துக்களால் மட்டும் போராட்டத்தை நடத்தலாம் என்று கூறியதுதான் காரணம் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையானது. இது, இரட்ணசபாபதி எல்லாத் தரப்பிலிருந்தும் தெரிவு செய்த இளைஞர்களை ஆயுத பயிற்சிக்கு PLO தொடர்புகளை பயன்படுத்தினார் என்பதில் தெரியவில்லையா?. PLOTE-இல் இருந்து பிரிந்தவர்களே ENTLF இயக்கத்தை தொடங்கினார்கள் இதுபோலவே EPRLF-இல் இருந்து EPDP உருவாகியது. விடுதலைப் புலிகளிலிருந்து கருணா குழுவினர் உருவாகியுள்ளது என்பதையும் காணலாம்.


தெய்வேந்திரன்

2:41 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home