Thursday, December 14, 2006

ஈழப்போராட்டத்தில் இன்னொரு வெற்றிடம்

புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பானது புலிகளுக்கு மட்டுமன்றி ஈழப்போராட்டத்தில் இன்னொரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஓரிரு நாட்கள் முன்னே இரத்தினசபாதியும் அவரைப் பிந்தொடர்ந்து அன்ரன் பாலசிங்கமுமாக நிரவப்படமுடியாத இரு வெற்றிடங்களை ஈழப்போராட்டத்தில் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு இளைஞர்கள் குழுக்களுக்கு ஆலோசனை வழங்குவதிலும் அவர்களின் அரசியல் கொள்கைகளை வகுப்பதிலும் இயக்கங்களுக்கு வெளிநாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் சமநேரத்தில் ஈழத்தமிழர்தம் அவல நிலையை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறியும் வாழ்நாளில் பெரும்பங்கு ஆற்றியிருக்கும் இவ்விருவர் பங்கும் அவர்தம் மேற் தொடுக்கப்பட்ட விமர்சனங்களை மீறியும் போற்றப்படவேண்டியது.

அன்ரன் பாலசிங்கம் ஈழப்போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் பக்கம் நின்று தனது பணியைச் சிறப்பாகவே ஆற்றியிருக்கிறார்.அவர் மீது எனக்கிருக்கும் விமர்சனங்களைச் சொல்ல இது நேரமில்லை என நினைக்கிறேன். அது மட்டுமன்றி ஈழப்போராட்டத்தின் சாட்சியமாய் இரண்டு நூல்களை 'போரும் சமாதானமும்','விடுதலை' எமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் அவை வெறும் வென்றவன் வரலாறு எழுதியதாய் இல்லாமல் ஈழப்போராட்டத்தின் பல்வேறு படிநிலைகளைப் புரிந்து கொள்ள ஆய்வேடுகளாக எழுதப்பட்ட நூல்களாகக் கருதுகிறேன்

ஈழத்திற்கு இது இழப்புகளின் காலம் என்று தோன்றுகின்றது.கடந்த இரு மாதம் ஏ.ஜே,கடந்த வாரம் சுவி என ஈழத்து இலக்கிய உலகம் இரு பெரும் ஆளுமைகளை இழந்தது.இன்று அரசியல் உலகம் இரண்டு தத்துவ அறிஞர்களை இழந்து நிற்கிறது ஒரு வகையில் சொன்னால் இந்தக் கூற்றும் மிகைவரல் தான் ஏனென்றால் காவோலை விழுவதும் குருத்தோலை விரிவதும் காலத்தின் கட்டாயம் ஆனால் ஈழத்தில் குருத்தோலைகள் முளையிலேயே கருகிப்போய் விடுவது காவோலைகளின் இழப்பைப் பெரிதாகக் காட்டுகிறது

0 Comments:

Post a Comment

<< Home