Thursday, January 04, 2007

எனக்கென்ன?

இடம்: வெள்ளவத்தை,கொழும்பு
காலம்: இற்றைக்கு சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு

நண்பர் ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் நாங்கள் அனைவரும் கூடியிருந்தோம்.வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் கடற்கரைக்கு மிக அருகாமையாக வீடு,இங்கிருந்து பார்க்கும்போது இந்துமா சமுத்திரம் அலையும் நுரையுமாகத் தெரிந்தது.இடுப்புயரச் சுவரில் சாய்ந்தவாறு நண்பர் பேசிக்கொண்டிருந்தார் இரண்டு வருடத்திற்கு முந்தி அடித்த சுனாமி முதல் அன்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைதியின் பெயரால் கொல்லப்பட்ட சதாம் வரைக்கும் பேச்சுச் சுழன்றடித்தது.

இன்னொரு நண்பர் வெளிநாட்டிலிருந்து சரக்கு வாங்கி வந்திருப்பதாகச் சொன்னதன் நிமித்தம் நானும் அங்கே மார்கழிக் குளிரில் கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவி நவீன சக்தி முற்றப் புலவனாக அமர்ந்திருந்தேன்.நாராய் நாராய் சைபீரிய நாராய் வடதிசை சைபீரியப் புல்வெளி தாண்டி தென்னிலங்கை வலசை வரும்போது இந்தப் பொடியனுக்கொரு வொட்கா வாங்கி வா நாராய் என்று பாடவேண்டுமெனத் தோன்றியது நல்லவேளை பாடவில்லை.பாடியிருந்தால் ஒரு குட்டி பூர்ஷ்வாவை நான் பெரிதும் ஒத்திருப்பதாக நண்பர் கொண்டிருக்கும் கருத்துக்கு நானே வலுச்சேர்த்தவனாவேன்.

வெள்ளவத்தை நோக்கி வந்துகொண்டிருந்த வேளையில் வெளியே வெடிச்சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது முன்னெப்போதும் இல்லாத அளவு கொழும்பு புதுவருடத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது.பாதுகாப்புக் கெடுபிடிகள் சொல்லுந்தரமற்றிருக்க தமிழர்கள் இவ்வளவு ஆரவாரத்துடன் புதுவருசம் கொண்டாடமாட்டார்கள் என்று தோன்றியது.அதை நிரூபிப்பது போன்று பம்பலப்பிட்டி கழிந்து வெள்ளவத்தை வரும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடித்த சப்தத்தை மீறித் தெரிந்த நிசப்தம் நிலமையைச் சொல்லிற்று. பெரும்பான்மை இனத்தவர்கள் இவ்வளவு ஆரவாரமாக புதுவருடத்தைக் கொண்டாட என்ன காரணமாக இருக்கும்.கடந்த ஓரிரு வாரங்களாக இராணுவத் தளபதியும் சனாதிபதியும் மாறி மாறிச் சொல்லிவரும் இன்னும் ஓரிரு மாதங்களில் புலிகளை முற்றாக அழித்துவிடுவோம் இரண்டே வாரத்தில் கிழக்கைப் பிடிப்போம் இரண்டே மாதத்தில் வடக்கைப் பிடிப்போம் அதன் பிறகு தமிழனின் புடுக்கைப் பிடிப்போம் என்னும் உறுதி மொழியன்றி வேறென்னவாக இருக்கும்.

இதில் தமிழனின் புடுக்கைப் பிடிக்கலாம் என்பதை விடப் போதையூட்டக் கூடிய அம்சம் எதுவும் சிங்களவர்களுக்குக் கிடையாது என்று தோன்றுகிறது.இதைச் சொன்னால் நண்பர் என்னைக் குறுந்தேசிய வாதி என்பார் என்பதால் அதையும் சொல்லவில்லை.சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது அவருக்கும் தெரியும்.அவர் வேலை செய்யும் அரச அலுவலகத்தில் அவருக்குக் கீழே உள்ளவர்களிடம் சமீப காலமாகத் தெரியும் திமிர்த்தனம் பற்றி என்னிடம் ஏற்கனவே குறைப்பட்டிருக்கிறார்.அதுமட்டுமன்றி அவர் தங்கியிருந்த வீட்டுக்காரன் அவரிடம் சொன்னானாம் வீட்டு வாடகை இரண்டாயிரம் ஏற்றியிருக்கு விரும்பினால் தந்துவிட்டுத் தங்கு இல்லாவிட்டால் நடையைக் கட்டு என்று.இதே வீட்டுக்காரன் வீட்டிற்குப் பிந்தி வருவது முதல் தமிழ்ப்பாட்டுப் போடுவது வரை நண்பர் சொன்ன நிபந்தனைகளுக்கு கீழிப்படிந்துதான் அந்த அறையை வாடகைக்கு விட்டிருந்தான்

புலி இளைத்துவிட்டது அதன் பல்லை ஏற்கனவே புடுங்கி விட்டோம் இனி அதன் வாலைப் பிடித்துத் தூக்கி பாக்குநீரிணையிலோ நந்திக் கடலிலோ வீசிவிடுவதுதான் மிச்சம்.இதுதான் பெரும்பான்மைச் சிங்களவர்களின் நினைப்பாக இருக்கிறது.புலியை எறிந்தாயிற்று என்று கேள்விப்பட்ட மறுநிமிடமே கொழும்பில் மீண்டும் ஒரு 83ஐ உருவாக்கவேண்டும் என்பதும் அதனோடிணைந்த கனவு.தமிழனை மீண்டு லங்காராணிக்குப் பதில் லங்கா முடிதவில் ஏற்றி யாழ்ப்பாணம் அனுப்புவது முதற் கனவு,வெள்ளவத்தை முதல் கொழும்பு மெயின் ஸ்ரீற்,செட்டித் தெரு கதிரேசன் தெரு என கொழிக்கும் தமிழர் சொத்துகளை தமதாக்குவது இன்னொரு கனவு


சிங்களவனுக்குப் பயம் தெளிந்து போய்விட்டது இது மற்றைய நண்பரின் கருத்து.அந்த நண்பருக்கு இந்த குறுந்தேசிய பெருந்தேசிய வியாதிகளில் நம்பிக்கையில்லை பட்டதைப் பட்டெனச் சொல்லும் திடம்.அப்ப என்ன கொழும்பிலை பழையபடி குண்டு வைக்கவேணும் என்கிறீரோ இது தோழரின் நக்கல்.அப்ப அவன் வாகரையிலும் வன்னியிலும் குண்டு குண்டாகப் போட்டு ஒவ்வொருநாளும் இருபது இருபத்தைஞ்சு என்று கொல்ல பார்த்துக் கொண்டிருக்கலாம் என்கிறீரோ இது முதல் அன்பரின் பதிலடி.

நீங்கள் இப்படிப் பண்ணிப் பண்ணித்தான் இன்றைக்கு இப்படி நிலைமைக்கு வந்திருக்கு,

நாங்கள் இதையும் பண்ணாமல் விட்டிருந்தால் இண்டைக்கு தமிழனைத் தாட்ட இடத்திலை புல்லு முளைச்சிருக்கும்.

அதுக்காக பொதுசனத்தைக் கொல்லுறதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்ப தமிழன் செத்தால் மட்டும் பரவாயில்லையோ.

யார் சொன்னது தமிழன் செத்தால் பரவாயில்லையென்று ஆனால் அரசாங்கம் செய்யுற பிழையளுக்கு அப்பாவிச் சிங்களச் சனத்தைப் பழிவாங்கக் கூடாது.

ஆரண்ணை அரசாங்கம் வெளிநாட்டிலையிருந்து இறக்கினதே இவ்வளவு சனமும் தங்களுக்குள்ளையிருந்து தெரிஞ்செடுத்த ஆட்கள் தானே அண்ணை அரசாங்கம்.

அப்ப குண்டு வெடிச்சா எல்லாம் சரியாயிடும் என்கிறீர்.

இவ்வளவு நாளும் வெடிக்காட்டிலும் வெடிக்குமெண்ட பயம்தானே அண்ணை அவங்களை அமுக்கி வைச்சிருந்தது.

அப்படியெப்பிடிச் சொல்லுவீர்.
அப்ப ஏனண்ணை எண்பத்தி மூண்டுக்குப் பிறகு இன்னொரு கலவரம் வரேலை.முல்லைத்தீவிலை ஆயிரத்தி முன்னூறு பேர்,ஆனையிறவிலை மூவாயிரம் பேரெண்டு செத்தும் சிங்களவன் ஏனண்ணை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவன்.

அப்ப நீங்கள் குண்டுகளை வையுங்கோ,

ஓமோம் நீங்கள் ஈராக்கிலை சதாம் சாகிறது பற்றியும்,கெப்பிற்றிகொலாவையிலை சிங்களவன் சாகிறது பற்றியும் மூதூரிலை முஸ்லிம் சாகிறது பற்றியும் கவலைப்படுங்கோ தமிழன் அன்றாடம் சாகிறது பற்றி வாயைத் திறக்காதையுங்கோ.

உது அசல் குறுந்தேசிய வாதம்.

உங்கடை வறட்டு மார்க்சீயம்

விவாதம் சூடாகிறது வெளிநாட்டு நண்பர் மாக்கரீத்தாவுடன் ஸ்பிறைற் கலந்தபடி என்னைக் கேட்கிறார் உனக்கென்ன மாதிரி ஒன்றோ ரெண்டோ.நான் சொல்கிறேன் ஒன் த ரொக்.பாவி மார்க்கரீத்தா எல்லாம் மிக்ஸ் பண்ணி அடிக்கவேண்டியது ஒன் த ரொக் குடிக்கிற சாமானில்லை.நான் மறுக்கிறேன்.எனக்கு ஒன் த ரொக் தான் வேணும் இல்லாட்டி வேண்டாம்.மார்க்கரீத்தா தொண்டைக் குழியை எரித்துக் கொண்டு உள்ளே இறங்குகிறது நான் ஒரே மூச்சில் குடித்ததை பார்த்துக் கொண்டிருக்கும் தேசியவாத நண்பர் மற்றவருக்குக் கண்ணைக் காட்டுகிறார் மற்றவர் போத்தலை மூடி வைக்க முற்பட நான் தடுக்கிறேன் எனக்கு வேணும்.

எனக்குத் தற்காலிகத் தேவை ஆளையடிக்கும் போதை,இவர்களது வாக்குவாதத்தை கேட்டால் பைத்தியம் பிடித்துவிடும் ஒரு உண்மையை சமாளிக்கலாம் இரண்டு உண்மைகள் ஒன்றுக்கொன்று முரணானவையாயிருந்தால் எப்படிச் சமாளிப்பது குட்டி பூர்ஷ்வா விழித்துக் கொள்கிறான் உன்னை மற உன்னையே மற இது உலகமயமாக்கல் காலம் இதில் நாடாவது இனமாவது கொள்கையாவது உலகமெல்லாம் உன் சொத்து நீ இந்த உலகின் சொத்து.

இங்கு இலங்கையில் நான் கொண்டாடும் புதுவருடத்தை அங்கே அமெரிக்கனும் கொண்டாடப்போகிறான் ரஷ்யனும் கொண்டாடப் போகிறான் ஈராக்கியனும் கொண்டாடப் போகிறான் உலகமெல்லாம் ஒரே குடையின் கீழ் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்.

இப்போது உனக்குத் தேவை போதை ஆமாம் ஆளையடிக்கும் போதை

ஒன்று, இரண்டு, மூன்று மார்க்கரீத்தா வெறும் ஐசின் குளிருடன் தொண்டையை புண்ணாக்கிக் கொண்டு உள்ளே செல்கிறது வெடிச்சத்தம் பலமாகக் கேட்கிறது பெரியதொரு மத்தாப்பு வெடித்து வானத்தில் பரவுகிறது.எவன் செத்தால் எனக்கென்ன எங்கை குண்டு வெடிச்சால் எனக்கென்ன ஹப்பி நியூ இயர்