Saturday, October 14, 2006

ஸ்குரூடிரைவர்

தமிழ் வலையுலகில் மெல்லத் தவழ்கையில் கண்ணில் பட்டார் தமிழ் பார்டென்டர்.சரிதான் என்னுடைய இச்சையை இங்கே தீர்க்கலாம் தீர்த்தம் பருகலாம் என்று போனால் அடிப்படையே தப்பாக இருக்கிறதே.

பார்ட்டென்டரின் வேலை என்ன?பாரில் வருபவர்களுக்குத் தீர்த்தம் தெளிப்பது.ஆனால் இந்த பார்ட்டென்டரோ வருபவர்க்கெதுவும் மிச்சமின்றி தீர்த்தம் அத்தனையையும் தானே பருகிவிடுவார் போலிருக்கிறது.போதாக்குறைக்கு வேலையில்லாதவன் என்று பக்கவிவாதம் வேறு.
அண்ணே அடிப்படையே தப்பண்ணே ஒரு ஸ்குரூடிரைவர் கலக்குவது எப்படியென்று தெரியாத நீங்கள் எல்லாம் என்னைப்போன்ற ரசனைவாதிகளுக்கு தாளாத மனவருத்தத்தையும் தீராத தேசியவியாதியையும் ஏற்படுத்திவிடுவீர்கள் போலிருக்கிறதே.

கில்லியிலிருந்து ஒரு அன்பர் வாங்க வாங்க ஸ்பைசியாய்த் தாங்க என்றிருக்கிறார்.என்றைக்கும் ஒரு பெடியனின் கொள்கை எல்லோரும் இன்புற்றிருக்கவன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே என்பதுதான்.

இதோ ஸ்பைசியாய் கொஞ்சம் ஸ்குரூடிரைவர்.

ஸ்குரூடிரைவர் ஒரு மிக்ஸ் பெயரைக் கேட்டதும் பயந்துவிடாதீர்கள்.மேலை நாடுகளில் இது பெட்டைகளின் பிரிய பானம்.இதிலும் பெட்டைப் பானம் பெடியன் பானமா என்று பெண்ணியவாதிகள் கிளம்பிவிடாதீர்கள் பிறகு நான் உங்களோடை கதைக்கிறதுக்கு லோங் ஐலண்ட் ரீ தான் குடிக்கவேணும்.

கொஞ்சம் வொட்கா,நிறைய தோடம்பழச் சாறு ரெண்டும் சேர்ந்தால் சந்திரலேகா அடச்சே ஸ்குரூடிரைவர்.நிறைய வொட்கா கொஞ்சம் தோடம்ப்ழச் சாறு ரெண்டும் சேர்ந்தால் அதுக்குப் பேர் அமரர் ஊர்தி டிரைவர்.

வெளியிலிருந்து பார்த்தால் அசல் தோடம்பழச் சாறுதான்.ஆகவே எங்கேயாவது விருந்தில் தோடம்பழச் சாறு அருந்தும் ஆண்கள் பெண்கள் அனைவரையும் சந்தேகப்படுங்கள்.

இந்த வொட்கா இருக்கே வொட்கா என்ன கவித்துவமான பெயர்.மார்க்சியம்,ரஷ்ய இலக்கியங்களுக்கு அடுத்தபடியாய் ரஷ்யாவிலிருந்து நான் பெற்றுக்கொண்டது வொட்காதான்.ஒரு கையில் வொட்கா இன்னொரு கையில் புஷ்கின்,அகமதோவா கவிதைகள் என்று கலந்து பருகிய நாட்கள் நாலைந்து வருடம் முன் தானென்றாலும் மங்கலாய்த் தான் தெரிகிறது.

வொட்காவுக்கு Tonic,Lime என்று பல மிக்ஸ் இருந்தாலும் என்னுடைய சொய்ஸ் ஸ்குரூடிரைவர்தான்.வொட்காவின் மிதமான நாக்கை அள்ளும் எரிவு,தோடஞ்சாறின் புளிப்பு இரண்டையும் சரியாகக் கலப்பதற்கு நல்லதொரு பார்டென்டர் இருந்தால் அன்று சொர்க்கம் அருகிலே

வொட்கா என்னும் பெயரே கொஞ்சமாக வொல்காவை ஞாபகப்படுத்துகிறதல்லவா.ஒரு கலாசாரத்தின் பிறப்பிடமல்லவா அது ?தனிப்பனைக் கள்ளிலிருந்து வொட்காவரை என்று எனது கலாச்சார நெடும்பயணத்தின் மைல்க் கற்களை எழுதிவைக்க விருப்பம்தான் பார்ப்போம்.

போலந்தின் Evolution ஐயும் ஸ்வீடனின் Absolut ஐயும் ரஷ்யாவின் ருஷ்காயாவையும் ஒருமுறையாவது காணாத கண்ணென்ன கண்ணே
இங்கே போய் காண்க

இசங்கள் பாதி இச்சைகள் பாதி கலந்து செய்த மனிதன் நான்

தமிழில் எழுதத் தெரிந்தவர்களெல்லாம் எழுத ஆசைப்படும் பத்தியை நானுமெழுத வந்தேன்.ஏற்கனவே இருக்கும் முகமூடிகளுக்குப் போட்டியுமல்ல இங்கே பத்தியெழுதும் பெட்டைக்குப் போட்டியுமல்ல.

பின்னவீனத்துவம்,முற்போக்கு,மார்க்சியம்.ட்ரொஸ்கீயம்,தமிழ்த்தேசியம்,
பேரினவாதம்,பாசிசம்,இருத்தலியம்,எக்சிடென்சியலிசம்,சேடிசம்,மசாக்கிசம்,மாந்திரீக யதார்த்தவாதம்,பெண்ணியம்,ஆணாதிக்கம்.கற்பு,கறுப்பு,ஆண்மை,பெண்மைகற்பிதங்கள்,
உலோகாயுதம்,ரியலிசம்,நியோ ரியலிசம்,ஸ்டாலினசம்,இந்துத்வா,இஸ்லாமிய அடிப்படைவாதம்,தீவிரவாதம்,பயங்கரவாதம்என்று அரசியல்,சமூக,இலக்கியங்களில் நிலவும் அத்தனை நடப்புக்கும் ஒவ்வொரு பெயர் சொல்லுறாங்களே ஈதெல்லாம் என்னவாக இருக்கும் என்று பூராய ஆரம்பித்த பதிவு.

பூராயப் பூராய இசங்களாகவும் வாதங்களாகவும் விரிந்துகொண்டிருக்கும் உலகில் தனியொருவனாகத் தத்தளித்து பின் அதுவே இன்னொரு வாதமாகவோ இசமாகவோ போய்விடலாமென மனம் தேறி ஆரயப் புறப்பட்டு வாதங்களில் பலனின்றி பக்க வாதத்திலும் பாரிச வாதத்திலும் உழன்று.தக்கதொரு இடமாய் தமிழ்மணத்தைக் கண்டின்புற்றீங்கு வந்தேன்


இந்த உலகம் மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.மனிதர்களோ இசங்களாலும் வாதங்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.இவைகளோ மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.தானே உருவாக்கிய கடவுளை தானே தாள்பணிந்தாற்போல, இவைகளோ மனிதனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டன.

தன்னைத் தானே சுற்றி இசங்களாலான கோடுகளையோ வட்டங்களையோ வரைந்துகொண்டு வழுவாமல் வாழ்வதற்கு முயற்சி செய்கிறான்.அந்த வட்டங்களில் சில சிறுவட்டங்கள் சில பெருவட்டங்கள்,சில நீள்வட்டங்கள் சில வட்டம்போற் தோன்றும் பரவளைவுகள் ஒவ்வொன்றின் இயல்புக்கேற்பவும் தன்னையும் சீரமைத்துக் கொள்வதிலும் இனங்காட்டிக் கொள்வதிலும் இந்த மனிதன் படும் பாடு இருக்கிறதே அம்மம்மா சொல்லி மாளாதது சொல்லில் எழுதாதது.

தனது வட்டத்திற்குள் மற்றவனை இழுத்தல்.மாற்றானின் வட்டம் பக்கம் வரும்போதெல்லாம் தாவி அதனுள் கலத்தல்.தன்னுடைய வட்டத்தை வாதங்களால் நிலைநிறுத்தல்.நிறுத்த முடியாத போதெல்லாம்.இசங்களையும் வாதங்களையும் குறைசொல்லல்.ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்றைப் பிரச்சாரம் செய்தல் என்று காலம் முழுவதும் இசங்களுடனும் வாதங்களுடனும் ஓடுகிறது மனித வாழ்க்கை.இவர்கள் பலவட்டங்களாற் சூழப்பட்ட மையங்கள்

கடவுள் கூட இந்த இசங்களின் முன்னைய வடிவம்தான் என்பது தெளிவு. ஈதெல்லாவற்றினதும் முடிபு ஆன்மீகம் எனச் செப்புவோர் கூட தாமிருப்பது இன்னோர் வட்டமே என்றுணர்வதில்லை.வெற்றானந்தப் பெருவெளியிற் சுற்றித் திளைப்பதாகப் பாவனை பண்ணுதல் மட்டுமே அவர்களால் முடிகிறது.வட்டங்கள் கோடுகளாலானவை

இசங்கள் கொள்கைகள் என்றால் கொள்ளையிலே போன இச்சைகள் மட்டும் மனிதனை விட்டுவிடுகிறதா.இச்சைக்கும் கொள்கைக்கும் இழுபறிப்படுவதே மனித வாழ்வாகிப்போய்விட்டது.
பென்ணியம் பேசும் ஆண்களுக்குள்ளும் பென்ணுடல் மீதான இச்சைகள் ஒளிந்திருக்கின்றன.மார்க்சியவாதிகளுக்குள் குட்டி பூர்ஷ்வா ஒளிந்திருக்கிறான்.தீண்டாமைக்குப் போராடிக்கொண்டே பூணூல் கனவு காண்பவர்களும் உள்ளார்கள்.உலகம் இசங்களால் மட்டுமல்ல இச்சைகளாலும் ஆனது.

தான் இச்சிப்பதை அடைவதற்கு இசங்களையும் வாதங்களையும் முன்வைப்பது பெருகிவிட்டது.இச்சைகளை மற்றவருக்கு மறைப்பதற்காக இசங்களாலான வட்டங்கள் தேவைப்படுகின்றது.கட்புலனாகும் வட்டங்கள் இசங்கள் கொள்கைகள்,கட்புலனாக வட்டங்கள் இச்சைகள்.இவையெல்லாவற்றினதும் மையம் நீங்கள்,நானுமே.

இதையெல்லாம் விமர்சனம் பண்ணி இசங்களிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் விடுபடும் நோக்கமோ அதனை விட்டுவருமாறு உங்களைக் கோரும் நோக்கமோ இந்தப் பொடியனுக்கு இல்லை.எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். இச்சைகள் பூர்த்தி செய்யப்படுவது இயலாத காரியம்.அதே போன்று எத்தனை இச வட்டங்களை வரைந்து கொண்டாலும் இச்சைகள் கட்புலனாகா வட்டமாக ஒளிந்துகொண்டே ஒளிர்கின்றன.அவற்றை மறைக்கலாம் மறக்க முடியாது.இமய மலை போனாலும் எழும்பி நின்று ஆடத்தான் செய்யும்.வேசங்களைக் களைவது இப்பதிவின் நோக்கங்களில் ஒன்று.

அது சமுதாயத்தில் காணும் மனிதர்களின் வேசமாகவும் இருக்கலாம்.எனக்கு நானே போட்டுக்கொண்ட வேசமாகவும் இருக்கலாம்.வேசங்களைக் களைவதென்பது சமூகத்தைச் சீர்திருத்திவிடும் நோக்கமல்ல.அதனைக் களையும் போது தோற்றமளிக்கும் வெற்றுடலைப் பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி.

கொஞ்சம் பொறுங்கோ மைய நீரோட்டத்தில்(தமிழ்மணத்தில்) என் சிறு நீரையும் கலந்துவிட்டு மிச்சத்தைக் கதைக்கிறேன்.

இவண்
தமிழ்மணத்தின் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்

ஏற்கனவே தமிழ் வலைப்பதிவுலகில் இருக்கும் லூசுகள் முகமூடிகள் காணாதென்று இன்னுமொன்றா என நீங்கள் நினைக்கலாம் என்ன செய்வது எல்லாம் என் தலைவிதி(அந்தாட்டிக் கண்டத்து மனிதன் ஆதிமனிதன் அவன் முகத்தையெல்லாம் காட்டமுடியாது)

மீண்டும்

மீண்டும் ஒரு நீண்ட விடுமுறை.அந்தா இந்தா என்று இழுத்தடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது நான் இந்தப்பக்கம் தலை,கை,கால்,முகம் காட்டி

இடையில் அவ்வப்போது தமிழ் வலைப்பதிவுகளின் பக்கம் மேற்குறிப்பிட்ட உறுப்புகளைக் காட்டினாலும் வேலை வாவா என்றது வலைப்பூ போ போவென்றது எழுதத் தூண்டும் சுவாரசியம் இல்லாமற்போனதும் பிறவிக்குணம் சோம்பல் இன்னமும் இறவாமை வேண்டுமென்று அடம்பிடிப்பதுமாய் இந்த வலைப்பதிவின் பக்கம் வரமுடியாமற் செய்துவிட்டன.

அன்பிற்குரிய அறிஞர் ஏ.ஜே இறந்துவிட்டார்.அவரை எழுத்தாளர் என்று சொல்வதை விட அறிஞர் அல்லது சிந்தனையாளர் என்று சொல்வதைத் தான் நான் விரும்புகிறேன் ஏனென்றால் வாழும் சமூகத்தில் எழுதிக் குவிப்பதே எழுத்தாளன் பணி என்று வாழ்பவர் மத்தியில் சமரசங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து காட்டியவர் ஏ.ஜே.

ஊரில் இருந்த காலத்தில் அவர் தமிழில் எழுதிய கட்டுரைகளை மல்லிகை இதழில் படித்திருக்கிறேன்.கனடாவில் ஒருமுறை சேரனைச் சந்தித்தபோது அதைப் பற்றிக் கேட்டதோடு ஏ.ஜே இப்போது ஏதாவது எழுதுகிறாரா எனக் கேட்டேன் அண்மைக் காலமாக தமிழில் எதுவுமில்லை என்றார் நிறைய எழுதினால் நீர்த்துப் போய்விடும் என்பது ஏ.ஜேயின் கொள்கையோ என்னவோ.நல்லவேளை ஜெயமோகன் போன்றவர்கள் ஏ.ஜேயைச் சுற்றி இருக்கவில்லை.

இடைப்பட்ட காலத்தில் நான் இழந்த இன்னொருவர் பிஸ்மில்லாகான்.அவரது மறைவின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவாவது இந்த வலைப்பதிவை மீண்டும் திறந்திருக்கலாம் ஆனால் அதையும் அவரே தடுத்துவிட்டார் அவரது பைரவி ஆலாபனையும் சிவரஞ்சினி,ஜோன்பூரியும் அதற்கு மேலும் நான் பேசுவது வீணென்று சொல்லிக்கொண்டிருந்தன.தனக்கான சோககீதத்தை தானே பாடி தானே கேட்ட ஒரே ஒருத்தர் பிஸ்மில்லாகானாகத் தான் இருக்க முடியும்

அவர்களது ஆத்மா சாந்தியடையவேண்டும்.

தமிழ்மணம் திரட்டியில் என் பதிவைத் திரட்டுவதற்கு மூன்று பதிவுகள் எழுத வேண்டுமாம்.இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறேன் அதற்குள் மிரட்டினால் எப்படி.பழைய பதிவுகள் இரண்டை மீள்பிரசுரம் பண்ணிவிட்டேன் அறிந்தவர்கள்,தெரிந்தவர்கள் மன்னிக்க.

ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்

நான் ஒரு கிளர்ச்சிக்காக என்னுடைய முன்னைய பதிவில் இவண் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான் என்று சொல்லிப் போனேன்.

சொன்னபின்னர் விடுமுறையின் மயக்கத்தில் அதுபற்றிய நினைவெதுவும் இல்லை.மீண்டு வந்து பதிவுகளை மீள வாசிக்கும்போது 'ஆள வந்தான்' என்ற வார்த்தை உறுத்துகிறது.

எனது பொதுவுடமை இசத்தை மீறி 'குட்டிபூர்ஷ்வா' இச்சை தலை காட்டிவிட்டதோ என்றதொரு கலக்கம்.

என்னதான் தத்துவங்களைப் படித்து முட்டிக்கொண்டாலும் எனக்குள்ளேயும் ஒரு பூர்ஷ்வா சிந்தனையாளன் உறங்கிக்கொண்டிருப்பதை அறிந்த மயக்கம்.

தமிழகத் திரைப்படல்கள் அவ்வப்போது ஆளுமைகளில் செலுத்தும் செல்வாக்கு பற்றி அறிதல் ஆர்வம்.

என்னதான் சிந்தித்தாலும் எல்லாவற்றையும் மீறி அந்தப் பாடல் எனக்குப் பிடித்துத் தான் உள்ளது.

ஆளவந்தான் படம் ஓரளவு பிடித்திருந்தது.அதைவிட ஆளவந்தானின் பாத்திரப் படைப்பு பிடித்திருந்தது.அதை விட முந்தி வந்தானா பிந்தி வந்தானா ஆளவந்தான் என்ற அரசியல் பிடித்திருந்தது.

அண்ணன் ஆளவந்தான்
தம்பி அதைப் பறிக்க வந்தான்.

முந்தி வந்த தமிழனை பிந்தி வந்த சிங்களம் ஆளுகின்றது.

முந்தி வந்த திராவிடனை பிந்தி வந்த ஆரியன் ஆளுகின்றான்.

முந்தி இருந்த செவ்விந்தியனை பிந்தி வந்த ஐரோப்பியன் இல்லாமலே செய்தான்.

முந்தி வந்த பாலஸ்தீனத்தை பிந்தி வந்த இஸ்ரேல் விழுங்கியது.

எங்கெங்கு நோக்கினும் ஆளவந்தானுக்கும் தம்பிக்கும் இடையிலான அதிகாரப் போட்டி கூர்மைப் பட்டுக்கொண்டே செல்கிறது.இன்னோரன்ன காரணங்களைச் சொல்லி ஆளவந்தவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.

இது ஆளவந்தானின் அழிவுடன் நின்றுவிடுமா.இல்லை இல்லவே இல்லை.அவனை அழித்த உரிமை பறிப்பாளனின் உரிமைகளைப் பறிக்க இன்னொரு ஆளவந்தான் வருவான்.

குட்டி பூர்ஷ்வா என்னும் மார்க்சியம் கற்றுத்தந்த சொல்லாடலை விட்டுப் பார்த்தால் உலகில் உள்ள அத்தனை மனிதனும் ஆளவந்தான் தான்.

காணி நிலம் வேண்டுமெனக் கேட்ட பாரதி.
இந்தியாவைக் கனவிலேயே கட்டி வளர்த்த அப்துல் கலாம்.
பாட்டாளி நாட்டை கட்டியமைத்த லெனின்.
தூய ஆரியர் குலத்தைக் கனவு கண்ட அடொல்ப் ஹிற்லர்.
உலக நாடுகளை ஒரு குடைக்கீழ் ஆள விரும்பும் புஷ்

அத்தனை பேரும் ஆளவந்தான் தான்.ஒவ்வொருவர் கனவிலும் இருக்கும் வித்தியாசம்.சிலர் தமக்குச் சொந்தமானதை ஆளவந்தார்கள்,சிலர் தமக்குச் சொந்தமானதோடு பிறருக்குச் சொந்தமானது எல்லாமே எல்லோருக்கும் சொந்தமானது என்றார்கள்.சிலர் மற்றவர்களுக்குச் சொந்தமனாதெல்லாவற்றையும் தனது என்றார்கள்.

இரண்டாமவன் பொதுவுடமைவாதி,மூன்றாமவன் சர்வாதிகார வாதி.

ஒவ்வொரு வாதிக்கும் பின்னால் ஒவ்வொரு ஆளவ்ந்தான் இருக்கிறான்.உலகில் நடக்கும் அத்தனை போர்களுக்கும் காரணம் இந்த ஆளவந்தான்கள் தான்.

அதற்காக ஆளவந்தான் கொள்கையே தவறு என்றில்லை.

மண்ணாள வந்த கௌதம சித்தார்த்தன் தன்னையே தான் ஆண்டு புத்தனானான்.

அவன் வழியில் பலர் தன்னைத்தானே ஆண்டார்கள்.அதாவது பௌத்தம் என்னும் இசத்துக்குள் இச்சைகளை கட்டுப்படுத்தி வாழ்ந்தார்கள்.அவர்களால் தங்களைத் தாங்களே ஆள முடிந்தது.

இன்னும் சிலர் அதே புத்தனை முன்வைத்து தரணியாள விரும்புகிறார்கள்.அவர்கள் ஆசைகளை ஆளவந்தார்கள்.

இதில் எனக்குள்ளிருக்கும் ஆளவந்தான் யாரென்று வினவுகிறேன்.

அவனுக்குள்ளும் சில குட்டிக் குட்டி ஆளவந்தான்கள் இருக்கிறார்கள்.ஒருத்தனுக்கு பெண்களை சைற் அடிக்கப் பிடிக்கும்,ஒருத்தனுக்கு வாசிக்கப் பிடிக்கும்,ஒருத்தனுக்கு இயற்கை பிடிக்கும்

ஒட்டுமொத்தமாக ஒரு பொடியன் என்னையே நான் ஆளவந்தான்.குட்டிக் குட்டி ஆளவந்தான்களின் இச்சைகளுக்கு அவ்வப்போது தீனி போடுவதன் மூலம் அவர்களை ஒரு பொடியன் என்ற பெரிய ஆளவந்தான்.அதாவது எனது ஆளுமைக்குள் கொண்டு வருகிறேன்.

ஆசைகளைத் துறப்பதென்பது புத்தனால்தான் முடியும்.அவற்றைக் கட்டுப்படுத்துவதென்பது ஒரு பொடியனாலும் முடியும்.

ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான் என்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு.உண்மையில் கண்டங்கள் ஐந்தல்ல ஏழு.
இதில் வட அமெரிக்கா,தென்னமெரிக்காவை அமெரிக்கா என்னும் கண்டமாக்கி ஆளற்ற அந்தாண்டிக்காவை விட்டு ஐம்பெருங் கண்டமென்று சொல்வார்கள்.

அந்த ஐம்பெருங் கண்டங்களும் எனது பார்வை எல்லைக்குள் இருக்கின்றன.நான் அந்தாட்டிக்காவில் இருக்கிறேன்.நான் கால்நீட்டி உட்கார்ந்தால் ஐம்பெருங் கண்டங்களும் எனது காலடியில் இருக்கும்.

உங்களது ஒவ்வொரு அசைவையும் அந்தாட்டிக்கா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டே இருக்கிறது.

posted by IIஒரு பொடியன்II at 4:14 AM 0 comments