Wednesday, October 25, 2006

இரவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்

நேற்று இரவு மழை பெய்தது.

இதைப் படிக்கும்போது உங்களுக்குச் சிரிப்பு வரலாம்.அதுவும் இந்தியாவின் சீராபுஞ்சியிலோ இலங்கையின் வட்டவளையிலோ இருப்பவர்களுக்குக் கோபம்கூட வரலாம்.மழை பெய்வது அதுவும் நேற்று இரவு பெய்வது பெரிய விடயமா என்ன?காயப்போட்ட படுக்கை விரிப்புகள் பற்றிய நினைவு இருந்திருக்காவிட்டால் எனக்குக் கூட அது பெரிதாகத் தோன்றியிருக்காதுதான்

எனக்கு சங்கீதம் தெரியாது.
பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம்
நிரம்பிய அந்த வீட்டின்
மேஜையில் வயலின் இருந்தது
படுக்கை வசத்தில்
எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்
தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது
வயலினின் நிறமோ அற்புதம்
இசை புழங்கிய வழவழப்பு
எல்ல இடத்திலும்
தப்பித் தவறி வந்து
ஊர்ந்துகொண்டிருக்கிறது
வயலின் நரம்புகலில்
மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு.
வாய் குவித்து ஊதத் தயக்கம்
விரலால் அப்புறப்படுத்தவும்.
என் செயல்கள் உண்டாக்கக்கூடிய
இசைக் கேடுகளை விட
எறும்பு ஊர்வது ஒரு ராகத்தின்
மேல்தானே

*கல்யாண்ஜி கவிதைகள் தொகுப்பிலிருந்து*

கல்யாண்ஜியின் வயலினில் ஊர்ந்த எறும்பு இராகத்தின் மேல் ஊர்ந்ததென்றால் எனது அடுக்குமாடி அறையின் ஜன்னலின் வெளியே கைக்கெட்டும் தூரத்தில் பெய்து கொண்டிருந்த மழை இசைக்குறிப்புகளை எழுதிவிட்டுப் போயிருந்தது.

பிரேம் ரமேஷின் இரவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் மாதிரியிலான ஒன்றை இங்கே நீங்கள் எதிர்பார்த்தால் மன்னிக்க பொடியனின் ரசனைக்கு நீங்கள் தயாராகவில்லை.நீங்கள் எதற்கும் முன்னொரு காலத்தில் நூற்றியெட்டுப் பொடியன் கள் இருந்தார்கள் கதையை வாசிப்பது நல்லது.

கதனகுதூகலம் என்ற ராகத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?ரகுவம்சசுதா என்ற பாடலை?கல்கத்தா படத்திலை நமது நகரம்தான் கல்கத்தாபுரி என்று ஒரு பாடல் வருமே அட இப்ப விளங்குதா?கதன குதூகல ராகத்தை நினைவுபடுத்த முடியாதவர்கள் கல்கத்தா பாடலை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.(ரகும்வச சுதா பாடலை கேட்கவிரும்புபவர்களுக்கு)

மோகனம்,கல்யாணி என்று பிரபலமான ராகங்களை விடவும் எந்தவொரு இசைக்கருவிக்கும் எந்தவொரு பாடகருக்கும் பொருந்திப் போகக்கூடிய ராகம் இந்தக் கதனகுதூகலம்.அதனை வாசிக்கும்போது பெயரில் இருக்கும் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்வது தான் இந்த ராகத்தின் சிறப்பு

வெளியே மழை ஸ்ஸ்ஸ்ஸென்ற இரைச்சலுடன் பெய்துகொண்டிருக்கிறது.சுழன்றடிக்கும் காற்றில் தெறிக்கும் மழைச்சாரல் படுவதும் நிற்பதுமாக விளையாடுகிறது காற்றின் குதூகலம் என்னையும் தொற்றிக்கொள்கிறது காற்றின் வருடலுக்கு எந்த வாத்தியம் பொருத்தமாக இருக்கும்?ம்ம் வயலின்? ம்ம் வயலின் நன்றாக இருக்கும் இசைத்தட்டை சுழலவிடுகிறேன்.குன்னக்குடியின் வயலினில் மழைச்சாரலாய்த்
தெறிக்கிறது ரகுவம்சசுதா

ஸாரிமகாரிசரிமமதாதநிககபசாசநிதபம ஸ்வரங்கள் வெளியே தெறிக்கின்றன மழைத்துளி உள்ளே தெறிக்கிறது.ஜன்னலில் முகம் பதிய முகத்தில் வந்து அறைகிறது ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு ஸ்வரமாய்.வில்லில் அம்பின் ஒவ்வொரு இழுப்புக்கும் என்னுடலின் உள்ளே ஒவ்வொரு நரம்பு அதிர்கிறது.மொத்தம் எத்தனை நரம்பு உடம்பில்?என்னென்ன சுரங்கள் எங்கே அதிர்கின்றன.இதென்ன மேல்ஸ்தாயி சட்ஜமா?காந்தாரத்திற்கு இந்த நரம்பா?
வாசிப்பது குன்னக்குடியா இல்லை மழையா?மழைதான் ஜன்னல் கம்பிகளில் யாழ் மீட்டுகிறதா?அதென்ன ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று ஒரே ஸ் வரிசையில் கொட்டுகிறதே?மற்ற ஸ்வரங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு.

ஆச்சு இதோ முடிஞ்சுது கரகோசத்தின் மத்தியில் குன்னக்குடி அடுத்த பாடலுக்குப் போகிறார்.வேண்டாம் அடுத்த பாடல் வேண்டாம் கதன குதூகலம்தான் வேண்டும். அடுத்தது என்ன புல்லாங்குழல்? ம் அதுதான் சரி ஜன்னல் கம்பிகளில் வயலின் வாசித்த காற்று இப்போது கம்பிகளின் இடைவெளியால் புகுந்து வெளியேறி ஊ ஊ வென்று புல்லாங்குழலிசைக்கு முயற்சிக்கிறது.

குன்னக்கூடி அலுமாரிக்குப் போக.என் ரமணி ஆரம்பிக்கிறார் எடுத்த எடுப்பிலேயே எந்தவித நீட்டல் முழக்கல் ஆலாபனை எதுவுமில்லாமாலேயே நேரே பாடல். ஜன்னல் கம்பிகளோடு புல்லாங்குழல் வாசித்த காற்று இப்போது ரமணியின் புல்லாங்குழலின் துளைகளில் நர்த்தனமாடுகிறது.அவர் நிறுத்தி ஆரம்பிக்கும் இடங்களில் காற்றுக்குப் பொறுமையில்லை பாம்பொன்றின் சீறலாக கீழ்ஸ்தாயி சட்ஜத்தில் இரைந்து மிரட்டுகிறது.இந்த மிரட்டலுக்கெல்லாமா புல்லாங்குழல் பணியும்? காற்றைப்பிடித்து வாயினால் ஊதி விரலினால் மூடி மடக்கி விரும்பிய துளையால் விரும்பியபடி வெளியேற்றி ரகுவம்சசுதாவை முடிக்கிறார் ரமணி.

இதை சக்சபோனில் கேட்டால் எப்படியிருக்கும்?.கத்திரி கோபாலநாத்தின் பாடல்களில் தேடுகிறேன் கதனகுதூகல ராகத்தில் தில்லானா இருக்கிறது ரகுவம்சசுதா இல்லை.தன்னிசையாக எம்.எஸ்ஸின் இசைத்தட்டைப் போடுகிறது கை.எம்.எஸ்ஸின் குரலில் ரகுவம்சசுதா; கண்ணனுடன் விளையாட்டயர்ந்த ராதையின் குரலில் குதூகலம்.கன்ணா வெளியே மழை பெய்கிறது கோவர்த்தன மலையை கொஞ்சம் தள்ளி வைத்து விளையாட வாயேன் குரல் கெஞ்சுகிறது. வாயோ கண்ணனை மறந்து ராமனைப் பாடிக்கொண்டிருக்கிறது.கண்ணனா ராமனா?யாருக்கிங்கே வித்தியாசம் தெரியும் எம்.எஸ்ஸின் குரல்தந்த போதையில் மழை,மழை தந்த போதையில் நான்.

வெளியே பளீரென்று அடித்த மின்னலுடன் காற்று வேகம் தணிந்து நின்றுபோய்விட்டது.இப்போது மழை தனது நர்த்தனத்தை ஆரம்பிக்கிறது.ஜன்னலின் கீழே நேரே உள்ள வீட்டின் முகட்டில் மழைத்துளிகளின் நர்த்தனம் சரியான வாத்தியம் எது தவில் நாதஸ்வரமா தபேலாவா.வேண்டாம் காற்று நின்ற நேரத்தில் காற்று வாத்தியம்.தபேலாவே சாலப்பொருத்தம். ஜாகீர் உசேனும் தபேலாவும் மழைக்குப் போட்டிக்கு கச்சேரி கட்டுகிறார்கள் போட்டிக்கு ஜலதரங்கம் வாசிக்கிறது மழை

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம் தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட-தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம் தரிகிட
தக்கத் ததிங்கிடத் தித்தோம்-அண்டம் சாயுது சாயுது சாயுது

இதென்ன தீன் தாளா? விளம்பித காலமா?தீம் தரிகிட தீம் தரிகிட தாம் தரிகிட தக்கத் ததிங்கிட

இதென்ன சதி தபேலா சுதியுடன் போகும்போது?ஏன் இந்த மழை இப்படி ஓய்ந்துபோய்விட்டது?ஜாகீர் உசேனை மட்டும் தனி ஆவர்த்தனம் வாசிக்க விட்டு எங்கே போகிறது மழை?