Friday, July 08, 2005

விடுமுறை சுகமானது



விடுமுறை சுகமானது.

அதுவும் பலமான உடலுழைப்புக்குப் பின்னான விடுமுறைகள் இதத்துடன் கூடவே நலத்தையும் நல்குபவை.

அந்த விடுமுறையே கடற்கரையோர நகரமொன்றிற்கானதாகும்போது.சுகம் சுகம் சுகம்.

கையில் அபிமான நெருதாவின் கவிதைகள்,என்.டி.ராஜ்குமாரின் கல்விளக்குகள்.பையில் இன்னும் சில புத்தகங்களுடன் போனதை விடுமுறை என்று சொல்ல முடியுமா இல்லை வாசிப்பதற்காக ஓரிடம் ஒதுங்கினேன் என்று செப்பலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

வழமையான ஒருநாட்பொழுதின் வேலைகளில் அலுவலக வேலை மட்டும் இல்லை.மற்றும்படி நீராடினேன் சாப்பிட்டேன்,தூங்கினேன் வாசித்தேன்.இத்தனையும் எனக்கிதுவரை பரிச்சயமில்லாதவொரிடத்தில் மிகப் புதுமையான விதத்தில் நடந்தேறின.

ஆனால் புத்தகங்களுடனான உறவாடல் மட்டும் தொன்மையாய் மிகப் பரிச்சயமானதாய் இருந்தது.

நீண்ட நாட்களினூடான அவசர ஓட்டத்தின் பின் கடந்த இருவாரங்களாக புத்தகங்களின் வாசனையை நுகர்ந்துகொண்டே அவற்றை வாசிக்க முடிந்தது.

வாசித்த நேரத்தில் புத்தகங்களை மார்பில் சாய்த்துக்கொண்டே யோசிக்க முடிந்தது.

களைத்த நேரத்தில் புத்தகத்தால் முகம்மூடித் தூங்க முடிந்தது.

விடுமுறைகள் இதம் தருபவை.

புத்தகத்துடன் கூடிய விடுமுறைகள் அதனிலும் இதமானவை.காதலியுடனான விடுமுறையப் போலவே.

என்னுடைய இசத்தினாலாய வட்டங்களிலிருந்து வெளிவந்து விடுமுறையை கொஞ்சம் அனுபவிக்க முடிந்ததில் உண்மையான மகிழ்வு நிரம்பியிருக்கிறது.

யார் யாருக்காகவோவெல்லாம் போட்டிருந்த முகமூடிகளை ஒருங்கே தூக்கிப் போட்டுவிட்டு எனக்கேயான பிரத்தியேக முகத்துடன் வாழமுடிந்தது.அடிக்கடி சவரக் கண்ணாடியில் உறுத்தும் தாடி முட்களைப் பிடுங்கும்போதெல்லாம் அருகே மிக அருகே நெருக்கத்தில் குழிவு ஆடியின் உருப்பெருக்கத்தில் தோன்றிய முகம் எனக்கேயானது.அதனை நான் யாருடனும் பங்குபோடத் தேவையில்லை என்ற சுதந்திர உணர்வை விடுமுறை எனக்களித்தது.

கற்றழுத்தச் சமனிலைக்காய் இறங்கியும் ஏறியும் ஓடும் விமானத்தின் நடுவே எனக்கான மதுவை மாறி மாறி எடுத்துத் தந்த விமானப் பணிப்பெண்களின் புன்னகை.தனௌள் தெரிந்த ரெடிமேட் தனத்தையும் மீறிய மென்சிரிப்பு
நுரைததும்பி வழியாமல் மென்விரல் கொண்டு தடுத்து ஹைனிக்கன் பியரை ஊற்றிய பெண்களின் லாவகமும் மென்சிரிப்புமே
அடிக்கடி பொடியனை நினைவுபடுத்தப் போதுமாயிருந்தன.அந்த நிமிடங்களில் மட்டும் ஆணாதிக்க/பெண்விடுதலைச் சிந்தனைகளை ஓரங்கட்டிவிட்டு ரசிகனாக வாழ்ந்திருந்தேன்.


நெடுந்தொலைவில் சூரியன் அமுங்கிய கடற்கரை,பல்நிற பல்லுருவபற்பேத மாந்தரின் பேச்சொலி,நாவில் தடுமாற்றத்தை கொடுக்கும் வொட்காவின் இதமான மணம் அதனுள்ளே சாறழிந்து மிதக்கும் எலுமிச்சைத் துண்டங்கள் எனக்காகக் காத்திராமல் உருகிப் போய்விடும் பனித்துண்டங்கள்.அரையிருட்டிற்கும் மிதப் பொழுதுக்கும் நடுவிலான நேரம், கையில் போதை தரும் கவிதைகளின் புத்தகம்.இத்துடன் கூடிய விடுமுறை இன்னொரு தடவை வரும்வரை

மீண்டும் உயிர்பெறும் மடிக்கணணி