Sunday, October 15, 2006

சுரா என்னும் Stylist

சமகாலத் தமிழிலக்கியப் பரப்பில் சுராவை முன்வைத்து தங்களை முற்செலுத்தியவர்கள் அனேகம்.சுராவைத் துதிபாடியவர்கள்.அவரை இலக்கிய/ஞானத் தந்தையாக ஏற்றுக்கொண்டவர்கள்.சுராவை விமர்சித்து ஏற்றுக்கொண்டவர்கள் சுராவை விமர்சிப்பதன் மூலமே தங்கள் இடத்தைத் தக்கவைக்க முயல்பவர்கள் என்ற பட்டியலின் ஓரத்தில் என்னைப் போன்ற சாதாரண வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இதை எழுதத் தூண்டுகிறது.

*-*-*
சுராவை விமர்சித்தே வளர்ந்தவர்கள் என்று நான் இருவரைக் கை காட்டுவேன்.ஒருவர் ஜெயமோகன் இன்னொருவர் சாருநிவேதிதா.இருவருடைய வளர்ச்சிக் கட்டத்திலும் சுரா ஏதோ ஒருவகையில் நேராகவோ எதிராகவோ தாக்கம் செலுத்தியிருக்கிறார்.சாருநிவேதிதா முதலில் போட்ட புத்தகமே ஜே.ஜே சில குறிப்புகள் சில விமர்சனங்கள் என்றுதான் நினைக்கிறேன்(சிறு கையேடு அளவில் இருக்கும் ஜே.ஜே என்ன சொல்ல வருகிறது என்று தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பியிருப்பார்)
*-*-*

இம்மாதக் காலச்சுவடு சுராவைப் பற்றிய மற்றவர்களின் நினைவஞ்சலிக் குறிப்புகளோடு விரிந்திருக்கிறது.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கோணத்தில் சுரா பிடித்திருக்கிறார்.சிறு குறிப்புகளாக வந்ததில் என்னைக் கவர்ந்தது ம.தி.சாந்தன் என்பவர் எழுதியிருந்த குறிப்பு.அவர் எழுதியிருந்தது என்னவோ வழமையான வார்த்தைகள்தான் ஆனால் அதில்லை விசேடம்.அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட சின்னச் சாந்தன்.

தனது தூக்குத் தண்டனைக்கெதிராக சுரா காலச்சுவட்டில் கையெழுத்து வேட்டை நடத்தியதையும் எழுத்தாளர்களைச் சேர்த்து குரல் கொடுத்ததையும் நினைவு கூர்ந்த அவர் தான் இன்று உயிருடன் இருப்பதற்கு சுராவும் ஒரு காரணம் என்கிறார்.அது மிகையில்லை
*-*-*

என்னைக் கவர்ந்தது சுரா என்னும் ஸ்டைலிஸ்ற் எழுத்து நடை,பேச்சு எல்லாவற்றிலும் தனக்கென்று ஒரு ஸ்டைலை வைத்திருந்தவர் சுரா. இன்றும் சுரா என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது ஒரு American Indian தாத்தாவின் பிம்பம்

காலச்சுவட்டில் வந்த சுராவின் துதிபாடல்களை விட சுராவிற்கான முக்கிய அஞ்சலிக் குறிப்பாக நான் கருதுவது ஜெயமொகனின் நினைவின் நதியில் நூலைத்தான்.வாழ்வில் ஒருமுறையேனும் ஜெயமோகனைச் சந்திக்க நேர்ந்தால் இந்த நூலுக்கு "சுரா என் காதலன்" என்று ஏன் பெயர் வைக்கவில்லை என்றுதான் கேட்பேன்.அந்தளவுக்கு சுரா என்னும் மனிதன் மீது ஜெயமோகன் என்னும் மனிதன் கொண்ட காதலாக விரிந்திருக்கிறது புத்தகம்.

அந்தப் புத்தகத்தை இரண்டே இரண்டு நாட்களில் எழுதித்தள்ளியதாக ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.நம்புவேன்.ஏனென்றால் காதலித்த ஒருவரின் பிரிவு எவ்வளவு மன அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடியதென்பது புரியும்
*-*-*

சுராவின் ஜே.ஜே சில குறிப்புகள் பற்றி மற்றவர்கள் சொல்லக் கேட்டு எனக்கேற்பட்டிருந்த படிமம் அதனைப் படித்தபோது குலைந்து போய்விட்டது.ஒருவேளை யார் வாயினும் கேட்காமல் நானே அந்த நூலைப் படித்திருந்தால் ஒருவேளை வித்தியாசமானதொரு எண்ணம் தோன்றியிருக்கலாம்.

ஜேஜேயைப் படிக்குமுன்னரே ஆதவனின் காகித மலர்கள்,என் பெயர் ராமசேசன் இரண்டும் படித்திருந்தேன் இரண்டும் ஏற்படுத்திய தாக்கத்தின் பாதியைக் கூட ஜே.ஜே சிலகுறிப்புகள் ஏற்படுத்தவில்லை.ஜே.ஜே சொல்வது ஒரு அறிவுஜீவியின் அறிவுஜீவியாக வாழ்வதற்குரிய போராட்டம்.ஆதவனின் கதைகள் சராசரி இளைஞனின் போராட்டம் இரண்டினதும் தளங்கள் வேறு ஆனாலும் இரண்டும் கட்டமைத்த/அல்லது கட்டுடைத்த நவீனத்துவ மனம் ஒன்றே அந்த வகையில் ராமசேசன் ஜேஜேயைவிட நவீனத்துவவாதி எனலாம் ஆனாலும் ஜேஜே எழுத்தாளனாச்சே அதனாலன்றோ பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியரெல்லோரும் நவீன படைப்பாளி எண்டவுடனே தங்களை ஜேஜேயில் அடையாளம் காணத் துவங்கி விடுகிறார்கள்

ஆனால் 90 களில் அந்த நூலைப் படித்துவிட்டு அதன் நவீனத்துவத்திலுள்ள போதாமைகளை விமர்சிப்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது-இதனாற்றான் ஜேஜே சில குறிப்புகளை விமர்சிப்பதை என்னளவில் தவிர்த்து வருகிறேன் இல்லையெனில் ஜே சிலகுறிப்புகளை விரித்து வைத்து அதைத் தாண்டியவன் தான் நவீனத்துவ வாசகன்/படைப்பாளி,விமர்சகன் இன்னோரன்ன இதுகள் என்ற கோட்பாட்டுக்குள் சிக்கிய மட்டை கட்டிய மாடுகளில் நானும் ஒருவனாகிவிடுவேனென்ற பயம்தான் காரணம்.

வெளிவந்த காலப்பகுதியில் ஜேஜே மிகச் சிறந்த ஒருநாவல்தான் சந்தேகமே இல்லை அதேபோன்று அது ஏற்படுத்திய கட்டுடைப்பும் நவீனத்துவத்தின் தாக்கமும் தமிழ்ச் சூழலுக்குப் புதியவைதான் அந்த நோக்கில் அந்தப் புத்தகத்தை யாராவது விமர்சித்தால் படிக்கலாம்.

இதே இடத்தில் சிறுகதையாக எழுதவேண்டியதை தட்டி நிமிர்த்தி நாவலாக்கிவிட்டார் சுரா என்றும் சில விமர்சனங்கள் வாசிக்கிறேன்.சிரிப்பு வருகிறது ஜெயமோகன் போன்றவர்களால் எந்தவொரு சிறுகதையையும் நாவலாக்கிவிட முடியும்.நாவல்களை சிறுகதையாக்கிவிட முடியும் ஜெயமோகனின் டார்த்தீனியம்,மாடன் மோட்சம் நாவல் வகைக்குரியவை ஆனாலும் சிறுகதையாக அவற்றை வாசிக்கும்போது இடறுவதில்லையல்லவா அதேபோன்றதுதான் ஜேஜேயின் வடிவம் அதனைச் சிறுகதையாக்கினால் அந்த நாவலின் மையநாடியான ஜேஜேயின் கடிதங்களை கத்தரிக்கவேண்டி இருந்திருக்கும் பிறகெங்கே அது சிறுகதை ஆனந்தவிகடனில் வரும் நாலுவரிக்கதையல்லவா

ஜே.ஜே சில குறிப்புகளை மீள எழுத முயன்று வெற்றி தோல்வி கண்ட சில நாவல்கள்/சிறுகதைகளைக் குறிப்பிடலாம்.அண்மையில் வந்த எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி ஜேஜேயின் இரண்டாம் பாகம் எனச் சொல்லலாம் எழுத்தாளன் சம்பத்தின் அகால மரணம் ஏற்படுத்திய தாக்கம் உறுபசி நாவல் மீது அரூபமாகப் படிந்திருக்கிறது.காரணம் கதையின் மையப்பாத்திரம்(அப்படி ஒன்று உண்டா சிதறுண்ட கதையென்று சொல்கிறார்களே)சம்பத் என்னும் ஒருவன் அவனை எங்களால் இறந்துபோன சம்பத்துடன் தொடர்புபடுத்த முடிவதே அந்த அரூப சுவாரசியத்திற்குக் காரணம்.மற்றும்படி அந்த வடிவம் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு பழகிவிட்டதால் பெரிதான தாக்கமெதையும் உறுபசி ஏற்படுத்தவில்லை.

ஜேஜெயை விட சுராவின் புளியமரத்தின் கதையும் அதேயளவுக்கு/அதைவிட குழந்தைகள் பெண்கள் ஆண்களும் பிடித்திருக்கின்றன.புளியமரத்தின் கதையில்தான் சுரா என்னும் ஸ்டைலிஸ்ற் வெளிப்படுகிறார் என்கிறேன் நான் அவரது பல்லக்குத் தூக்கிகள்,ரத்னாபாயின் ஆங்கிலம்,பிரசாதம் போன்ற சிறுகதைகளில் தெறிக்கும் அங்கதம்,எள்ளல்,நையாண்டியை விட அதிகமாக புளிய மரத்தின் கதையில் வெளிப்பட்டுள்ளது என்பேன்.

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலே இல்லையென்று ஜெயமோகன் நிராகரிப்பதுபோன்று என்னால் நிராகரிக்க முடியவில்லை.ஜேஜேயுடன் ஜெயமோகனின் தேவை தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.குழந்தைகள் பெண்கள் ஆண்களில் தான் சுரா கொஞ்சமாவது உயிர்ப்புடன் வெளிப்படுகிறார் என்பது எனது வாதம்

சுராவின் கவியுலகம் பற்றிப் பின்னொரு நேரம் பார்க்கலாம்.நாவல்களில் கட்டிறுக்கிய மொழியின் வீரியமான வெளிப்பாடு சுராவின் கவிதைகளில் உண்டு.

சுரா போன்றதொரு ஸ்டைலிஸ்றின் மறைவு என்னைப்போன்ற பொடியனை நிறையவே உலுக்கிவிடுகிறது.இயல்பாகவே தேர்ந்தெடுத்து ரசிக்க விரும்புவது இந்தப் பொடியனின் இயல்பு அது ஜேஜேஎன்னும் அறிவுஜீவியை விட இன்னொரு ஸ்டைலிஸ்றை அல்லது இசை,இயல்,இலக்கியம்,மதுவென்று தேர்ந்து அதில் மூழ்கும் ஒரு ரசனாவாதியை ஏன் சுரா படைக்காமற் போனார் என்று கேள்வி கேட்கிறது.

அதற்குப் பதிலாய் லெதர் பாரில் பீர் அடிப்பதாய் அள்ளி விடுபவற்றையும் கூகிள் குடிகாரரின் ரசனையையுமல்லவா நான் வாசிக்கவேண்டியிருக்கிறது